ADDED : ஆக 30, 2024 09:10 PM
புதுடில்லி:டில்லி தேசிய உயிரியல் பூங்கா மற்றும் அசாம் உயிரியல் பூங்கா ஆகியவற்றுக்கு இடையேயான விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ், வங்கப் புலி, காண்டாமிருகம் மற்றும் பிளாக் பக் மான் ஆகியவை டில்லி பூங்காவுக்கு இம்மாதத்தில் கொண்டு வரப்படவுள்ளன.
இதுகுறித்து, டில்லி தேசிய உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டில்லி உயிரியல் பூங்காவுக்கு புதிய உயிரினங்களைக் கொண்டு வர டில்லி பூங்கா குழு வரும் 2ம் தேதி அசாம் மாநிலத்துக்கு புறப்படுகிறது. அசாம் உயிரியல் பூங்காவுடன் செய்து கொண்டுள்ள விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் அங்கிருந்து ஒரு ஆண் காண்டாமிருகம், ஒரு வங்கப் புலி மற்றும் ஒரு பிளாக் பக் மான் ஆகியவை டில்லிக்கு கொண்டு வரப்படும்.
கடந்த 9 ஆண்டுகளாக டில்லி பூங்காவில் ஆண் காண்டாமிருகம் இல்லை. இங்கு, மகேஸ்வரி மற்றும் அஞ்சுனா ஆகிய இரண்டு பெண் காண்டாமிருங்கள் மட்டுமே உள்ளன. இதையடுத்து, அசாம் உயிரியல் பூங்கா நிர்வாகத்திடம் ஆண் காண்டா மிருகம் கேட்டு கோரிக்கை விடப்பட்டது.
அதே நேரத்தில் டில்லி பூங்காவில் இருந்து அசாம் உயிரியல் பூங்காவுக்கு தேவையான விலங்குகள் அனுப்புவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. வரும் 2ம் தேதி அசாம் புறப்படும் குழு, அங்கு சென்றடைய நான்கு நாட்கள் ஆகும். அங்கிருந்து விலங்குகளுடன் திரும்பி டில்லிக்கு வர நான்கு நாட்கள் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விலங்குகளின் பாதுகாப்பான போக்குவரத்துக்கு தற்போது நிலவும் வானிலை சாதகமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.