ADDED : ஜூலை 04, 2024 01:19 AM
குவஹாத்தி, வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், இங்கு பாயும் பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் 23 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 11.50 லட்சம் பேர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
குறிப்பாக, லக்கிம்பூர் மாவட்டம் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இங்கு வசிக்கும் 1.65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதே போல், பிரசித்தி பெற்ற காசிரங்கா பூங்காவில் வெள்ளம் சூழ்ந்ததால் விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி உயர்மட்ட குழுவினருடன் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆலோசனை நடத்தினார்.