ராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல் துப்பாக்கி முனையில் தோழி பலாத்காரம் மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
ராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல் துப்பாக்கி முனையில் தோழி பலாத்காரம் மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
ADDED : செப் 13, 2024 02:04 AM
இந்துார், மத்திய பிரதேசத்தில் ராணுவ பயிற்சி அதிகாரிகளை தாக்கிய கும்பல், அவர்களது தோழியரில் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் இந்துாரில் உள்ள மோவ் கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த இரண்டு ராணுவ பயிற்சி அதிகாரிகள், தங்கள் தோழியருடன் அங்குள்ள சுற்றுலா தலமான மண்டலேஸ்வர் பகுதிக்கு நேற்று முன்தினம் சென்றனர்.
நான்கு பேரில், ஒரு ராணுவ அதிகாரி தன் தோழியுடன் மலைக் கோவிலுக்கு சென்றார்.
மீதமுள்ள இருவர் மலையடிவாரத்தில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த ஏழு பேர் அடங்கிய கும்பல், காரில் இருந்த இருவரையும் தாக்கியது.
மலைக்கோவிலில் இருந்து திரும்பிய ஜோடியையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது.
இதில், ஒரு ஜோடியை பிணைக் கைதியாக பிடித்து வைத்த கும்பல், மற்றொரு ஜோடியிடம் 10 லட்சம் ரூபாயை கொண்டு வரும்படி விரட்டியடித்தது.
இது குறித்து உயரதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, தப்பி வந்த இருவரும் தகவல் அளித்தனர். பின்னர், போலீசார் துணையுடன் சம்பவ இடத்துக்கு சென்ற போது, ராணுவ அதிகாரி மற்றும் அவரது தோழியை விட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
பின்னர், நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பெண்கள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
விசாரணையில், ஏழு பேர் கும்பல் துப்பாக்கி முனையில் அந்தப் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இருவரை கைது செய்தனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

