முதல்வர் உதவியாளர் குமார் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் மனு
முதல்வர் உதவியாளர் குமார் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் மனு
ADDED : ஜூலை 26, 2024 12:59 AM
புதுடில்லி,:ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா பெண் எம்.பி.,யை தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால், மே 13ம் தேதி டில்லி முதல்வர் பங்களாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க வந்தார்.
அப்போது, முதல்வரின் தனி உதவியாளர் பிபப் குமார், மாலிவாலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஸ்வாதி மாலிவால் கொடுத்த புகார்படி சிவில் லைன்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குமாரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் குமார் தாக்கல் செய்த மனு, கடந்த 12ம் தேதி தள்ளுபடி ஆனது. இதையடுத்து, கடந்த 19ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் அதை ஏற்றுக் கொண்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

