ADDED : பிப் 26, 2025 11:14 PM
பெலகாவி: நள்ளிரவு ஏ.டி.எம்., மையத்துக்குள் நுழைந்த மர்ம கும்பல், இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடித்தது.
பெலகாவியின், சாம்ப்ரா கிராமத்தின் பிரதான சாலையில், ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கு பாதுகாப்பு ஊழியர் இருக்கவில்லை.
நேற்று முன்தினம் நள்ளிரவு, இங்கு வந்த மர்ம கும்பல், ஏ.டி.எம்., மையத்துக்குள் நுழைந்தனர். காஸ் கட்டர் பயன்படுத்தி, இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்தனர்.
மர்ம கும்பல் ஏ.டி.எம்.,முக்குள் நுழைந்து, கண்காணிப்பு கேமரா மீது எதையோ ஸ்ப்ரே செய்தனர். அப்போது எச்சரிக்கை அலாரம் மூலமாக, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றது.
அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் போலீசார் அங்கு வருவதற்குள், மர்ம கும்பல்தப்பியோடியது.
இது குறித்து, பெலகாவி போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தின் சுற்றுப்பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
பிரதான சாலையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். பரபரப்பான பகுதியில் கொள்ளை நடந்திருப்பதால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஏ.டி.எம்., இயந்திரத்தில், 75,600 ரூபாய் கொள்ளை போனது. சம்பவம் நடந்த இடத்தை, பெலகாவி நகர போலீஸ் கமிஷனர், நேற்று காலை பார்வையிட்டார்.

