நடிகர் துருவா சர்ஜாவின் 'ஜிம்' பயிற்சியாளர் மீது தாக்கு
நடிகர் துருவா சர்ஜாவின் 'ஜிம்' பயிற்சியாளர் மீது தாக்கு
ADDED : மே 28, 2024 06:16 AM

பெங்களூரு:பிரபல நடிகர் துருவா சர்ஜாவின் ஜிம் பயிற்சியாளரை, மர்ம நபர்கள் தாக்கியதில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கன்னட திரைப்பட நடிகர் துருவா சர்ஜா. இவருக்கு ஜிம் பயிற்சியாளராக பிரசாந்த் பூஜாரி உள்ளார். நேற்று முன்தினம் கே.ஆர்., சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கைந்து பேர், அவரை வழிமறித்தனர். தாங்கள் கொண்டு வந்திருந்த ஹாக்கி மட்டை, மரக்கட்டையால், பிரசாந்தின் காலில் கடுமையாக தாக்கினர்.
இதை பார்த்த அப்பகுதியினர் தடுக்க வந்தனர். மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பியோடி விட்டனர். படுகாயமடைந்த பிரசாந்த் பூஜாரி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரின் காலில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார், பிரசாந்திடம் வாக்குமூலம் பெற்றனர். காதல் விவகாரம் தொடர்பாக தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நடிகர் துர்வா சர்ஜா கூறுகையில், ''பிரசாந்த் பூஜாரி, தனிப்பட்ட காரணத்தால் தாக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஆதரவாக நான் இருக்கிறேன்,'' என்றார்.