தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய தோழி மீது தாக்குதல்
தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய தோழி மீது தாக்குதல்
ADDED : பிப் 23, 2025 07:03 AM
ஷிவமொக்கா : தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த, தோழி மீது, பெண்ணின் கணவர் தாக்குதல் நடத்தினார்.
ஷிவமொக்கா டவுன் வினோபாநகர் வசிப்பவர் பிரகாஷ். இவரது மனைவி லலிதா. தம்பதிக்கு 12 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரியல் எஸ்டேட் தொழில் செய்த பிரகாஷ், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தார்.
இதனால் மனம் உடைந்த லலிதா நேற்று வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். லலிதாவை அவரது தோழி ஆஷா மீட்டு, ஷிவமொக்கா அரசு மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினர்.
இந்நிலையில் நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்த பிரகாஷ், ஆஷாவிடம் தகராறில் ஈடுபட்டார். 'உன்னால் தான் எங்கள் குடும்பத்தில் பிரச்னை. யாரை கேட்டு தற்கொலைக்கு முயன்ற என் மனைவியை காப்பாற்றினாய்' என்று கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆஷாவை, பிரகாஷ் சரமாரியாக தாக்கினார். பதிலுக்கு ஆஷாவும், பிரகாஷ் முகத்தில் மூன்று குத்துகள் விட்டார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், பிரகாஷை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஆஷா தாக்கப்பட்ட வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது.