மாட்டு வியாபாரியை கொல்ல முயற்சி; கோவை கூலிப்படையினர் 5 பேர் கைது
மாட்டு வியாபாரியை கொல்ல முயற்சி; கோவை கூலிப்படையினர் 5 பேர் கைது
ADDED : ஆக 06, 2024 11:56 PM
பாலக்காடு : பாலக்காடு அருகே, கரூரை சேர்ந்த மாட்டு வியாபாரியை கொல்ல முயன்ற வழக்கில், கோவையை சேர்ந்த கூலிப்படையினர் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் முதலியார் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன், 41. மாட்டு வியாபாரியான இவர், வியாபாரம் தொடர்பாக அடிக்கடி பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் அருகே உள்ள வாணியம்குளம் சந்தைக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், வியாபாரம் தொடர்பாக, ஜூலை 11ம் தேதி காலை ரயிலில் வந்த இவர், ஒற்றைப்பாலத்தில் பாரதப்புழை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது, மர்ம நபர்கள் அவரை கத்தியால் சரமாரியாக குத்தினர். அங்கிருந்து தப்பி ஓடிய அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, ஒற்றைப்பாலம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து, டி.எஸ்.பி., மனோஜ்குமாரின் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அஜீஷின் தலைமையிலான சிறப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், பத்மநாபனை தாக்கியது, தமிழகத்தில், கோவை மாவட்டம், கோவைப்புதூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த சல்மான்கான், 22, அவரது சகோதரர் ஷாருக்கான், 21, கரும்புக்கடை சேரன் நகரைச் சேர்ந்த முகமதுநாசர் 36, சங்கர் நகரைச் சேர்ந்த முகமது ரசியா ராஜா, 22, மகாலிங்கபுரம் பகுதி சேர்ந்த சையத் அஸ்ஹருதின், 22, என்பது தெரியவந்தது.
கோவையில் இவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீசார், அப்பகுதியை சுற்றி வளைத்து ஐந்து பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீஷ் கூறியதாவது:
மாட்டு வியாபாரி பத்மநாபனுக்கும், இன்னொருவருக்கும் பண பிரச்னையில் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், கூலிப்படையை வைத்து பத்மநாபனை கொலை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, கோவையை சேர்ந்த கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். ரயிலில் வந்த கூலிப்படையினர் ஐந்து பேரும், பத்மநாபனை பின் தொடர்ந்து கத்தியால் குத்தியுள்ளனர். அவர்கள் பிடியில் இருந்து பத்மநாபன் தப்பியதும் அவர்கள் தலைமறைவாகி விட்டனர். தகவல் தொழில்நுட்ப உதவியுடன், கூலிப்படையினர் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து கைது செய்துள்ளோம்.
பத்மநாபனை கொலை செய்வதற்கு, 15 லட்சம் ரூபாய் தொகை பேசி, முன் பணமாக, 30 ஆயிரம் ரூபாயை கும்பல் பெற்றுள்ளது. கொலை செய்ய திட்டமிட்டவர் தற்போது தலைமறைவாக உள்ளார். இவரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினார்.