'மூடா' முறைகேட்டை அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ., ஆர்வலரை கொல்ல முயற்சி
'மூடா' முறைகேட்டை அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ., ஆர்வலரை கொல்ல முயற்சி
ADDED : செப் 03, 2024 11:26 PM

மைசூரு : 'மூடா' முறைகேட்டை அம்பலப்படுத்திய, மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலரை, கொலை செய்ய முயற்சி நடந்து உள்ளது.
மைசூரு நஜர்பாத்தை சேர்ந்தவர் கங்கராஜ். தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர். ஆவணங்கள், புகைப்படங்களை வெளியிட்டு மைசூரு மூடாவில் நடந்த, முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். முதல்வர் சித்தராமையா மீதும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி துமகூரு துருவகெரேயில் இருந்து, காரில் மைசூரு நோக்கி கங்கராஜ், அவரது மனைவி, மகள் சென்றனர். மைசூரு - ஸ்ரீரங்கப்பட்டணா சாலையில் மதியம் 1:30 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது வாகன பதிவெண் இல்லாத பைக்கில் வந்த இருவர், காரை வழிமறித்து கங்கராஜிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். ஆயினும், அவர் காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றார். மைசூரு புறநகர் பகுதியில் சென்ற போது, மேலும் இருவர் காரை மறித்து பிரச்னை செய்ய முயன்றனர். அந்த வழியாக நிறைய வாகனங்கள் வந்ததால், பைக்கில் வந்தவர்கள் அங்கிருந்து சென்றனர்.
இந்நிலையில் தன்னை கொல்ல முயன்றதாக, மர்ம நபர்கள் நால்வர் மீது மைசூரு போலீஸ் கமிஷனர் சீமா லட்கரிடம், கங்கராஜ் நேற்று புகார் செய்தார். பின், அவர் அளித்த பேட்டி: எனக்கு கொலை மிரட்டல் உள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று, முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சி தலைவர் அசோக்கிற்கு கடிதம் எழுதினேன்.
ஆனால் பாதுகாப்பு தர அரசு மறுத்து விட்டது. தேவைப்பட்டால் சொந்த செலவில் பாதுகாப்பு பணிக்கு, ஆட்களை வைத்து கொள்ளுங்கள் என்று சொல்கின்றனர். நான் சாதாரண நபர். அரசு துறையில் நடக்கும் ஊழல்களை வெளிகொண்டு வருகிறேன். சொந்த செலவில் பாதுகாப்புக்கு ஆள் வைக்க என்னிடம் பணம் இல்லை.
கடந்த 1ம் தேதி துருவகெரேயில் இருந்து மைசூருக்கு காரில் வந்த போது, பதிவெண் இல்லாத 2 பைக்குகளில் வந்த நான்கு பேர் என்னை தாக்க முயன்றனர். என்னை கொலை செய்ய முயற்சி நடந்தது.காரில் இருந்த மனைவி, மகள் பயந்து விட்டனர். எங்களுக்கு ஏதாவது ஆனால், அரசும் போலீஸ் துறையும் தான் பொறுப்பு. எனது உயிர் இருக்கும் வரை, ஊழலை வெளிகொண்டு வர போராட்டம் நடத்துவேன். இவ்வாறு அவர்கூறினார்.