பண்ணை ஷெட்டில் அடைத்து வைத்து மனைவியை கொடுமைப்படுத்திய ஏட்டு
பண்ணை ஷெட்டில் அடைத்து வைத்து மனைவியை கொடுமைப்படுத்திய ஏட்டு
ADDED : செப் 01, 2024 06:44 AM
பெலகாவி : மனைவியை பண்ணை வீட்டின் ஷெட்டில் அடைத்து வைத்து, சித்ரவதை செய்ததாக ஏட்டு மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
பெலகாவி, அதானியின் கன்னாளா கிராமத்தில் வசிப்பவர் எல்லப்பா அஸ்கி, 38. இவர் விஜயபுராவின், திக்கோடா மாவட்ட ஆயுதப்படையில் ஏட்டாக பணியாற்றுகிறார்.
இவரது மனைவி பிரதிபா, 34. இவர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சமீப ஆண்டுகளாக, எல்லப்பா அஸ்கியின் குணம் மாறியது. மனைவி நடத்தையை சந்தேகித்து, 'சைக்கோ' போன்று கொடுமைப்படுத்தத் துவங்கினார். தினமும் அடித்து, துன்புறுத்தினார்.
கன்னாளா கிராமத்தில், எல்லப்பா அஸ்கிக்கு பண்ணை உள்ளது. அங்குள்ள ஷெட்டில் சில நாட்களாக மனைவியை அடைத்து வைத்து, உடலில் சூடுவைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
அங்கிருந்து தப்பி வந்த பிரதிபா, பெலகாவியின் மகளிர் பாதுகாப்பு மையத்துக்குச் சென்று, நடந்ததை கூறி உதவி கேட்டார்.
மையத்தின் ஊழியர்கள், பெலகாவி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களின் உதவியுடன், தீக்காயங்களுடன் இருந்த பிரதிபாவை, மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த பிரதிபாவின் பெற்றோர், தங்கள் மகளை கொடுமைப்படுத்திய எல்லப்பா மீது நடவடிக்கை எடுக்கும்படி, அதானியின், ஐகளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளனர். போலீசாரும் விசாரிக்கின்றனர்.