ADDED : ஆக 22, 2024 06:52 PM

புதுடில்லி:செயலி அடிப்படையில் இயங்கும் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி, டில்லி - என்.சி.ஆர்., பகுதியில் ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை நேற்று தொடங்கினர்.
டில்லி ஆட்டோ டாக்சி போக்குவரத்து காங்கிரஸ் சங்கத்தின் தலைவர் கிஷன் வர்மா கூறியதாவது:
நகரில் செயலி அடிப்படையில் பைக் டாக்சிகள் இயங்குகின்றன. இவர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு வணிக ரீதியிலான நம்பர் பிளேட் கிடையாது. சுய பயன்பாட்டுக்கான நம்பர் பிளேட்டை பொருத்திக் கொண்டு வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குற்றம்.
செயலி அடிப்படையிலான இத்தகைய பைக் டாக்சிகளால் ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. செயலி அடிப்படையிலான பைக் டாக்சிகளை முறைப்படுத்த வேண்டும்.
வணிக ரீதியிலான நம்பர் பிளேட் அல்லாத பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தோம்.
அரசு இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம் காரணமாக டில்லி - என்.சி.ஆர்., பகுதியில் 80 சதவீதத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள், டாக்சிகள் நேற்று இயங்கவில்லை. இதனால பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
டாக்சி கிடைக்காததால் பேருந்துகளுக்காக காத்திருந்து பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தாங்கள் விரும்பிய இடத்திற்கு குறித்த நேரத்திற்குச் செல்ல முடியவில்லை என, பயணியர் வருத்தம் தெரிவித்தனர்.
செயலி அடிப்படையிலான சேவையும் கிடைக்காமல் பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டனர். ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள், செயலி அடிப்படையில் இயங்குவதையும் நேற்று புறக்கணித்து, போராட்டத்தில் பங்கேற்றதே பொதுமக்கள் அவதிக்குக் காரணம்.
செயலியை நிர்வகிக்கும் நிறுவனங்கள், எங்கள் சேவைகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தை வழங்குகின்றன. இதனால், எங்கள் வாகனங்களின் தவணையை செலுத்தவும், மற்ற செலவுகளை சமாளிக்கவும் முடியவில்லை. எங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை உறுதி செய்ய முடியவில்லை. எங்கள் குடும்பங்களுக்கு போதுமான உணவும் கிடைக்கவில்லை.
ஆதர்ஷ் திவாரி,
டாக்சி ஓட்டுநர்