போலீஸ்காரரை தாக்கியதால் ஆட்டோ டிரைவர் சுட்டு பிடிப்பு
போலீஸ்காரரை தாக்கியதால் ஆட்டோ டிரைவர் சுட்டு பிடிப்பு
ADDED : ஆக 02, 2024 10:08 PM

ஹூப்பள்ளி : கொள்ளை வழக்கில், நகைகளை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்ற போது போலீசாரை தாக்கிய ஆட்டோ டிரைவர் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரணாப் துலாய், 30. பெலகாவி சவுந்தட்டியில் உள்ள நகை கடையில் வேலை செய்கிறார்.
கடந்த மாதம் 30ம் தேதி சொந்த ஊருக்கு ரயிலில் செல்வதற்காக, சவுந்தட்டியில் இருந்து ஹூப்பள்ளிக்கு பஸ்சில் வந்தார்.
ராணி சென்னம்மா சர்க்கிளில் இருந்து, ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றார். பிரணாப்பிடம் ஆட்டோ டிரைவர் நைசாக பேச்சு கொடுத்தார்.
உல்லாச ஆசை
“எனக்கு தெரிந்த லாட்ஜ் உள்ளது. அங்கு குறைந்த பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம்,” என ஆசை காட்டினார். இதற்கு பிரணாப்பும் சம்மதம் தெரிவித்தார்.
ஆனால் பிரணாப்பை லாட்ஜிற்கு அழைத்துச் செல்லாமல், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு ஆட்டோ டிரைவர் அழைத்துச் சென்றார். அவரும் அவரது கூட்டாளிகள் மூன்று பேரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி, பிரணாப்பிடம் இருந்து பணம், தங்கச்சங்கிலி, மொபைல் போனை கொள்ளை அடித்துவிட்டு தப்பினர்.
கையில் வெட்டு
இதுகுறித்து ஹூப்பள்ளி ரூரல் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி இருந்தது. இந்த வழக்கில் ஆட்டோ டிரைவர் அருண், 27, நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். கார்வார் சாலையில் காலி நிலத்தில், மண்ணுக்குள் தங்கச்சங்கிலியை புதைத்து வைத்திருப்பதாக போலீசாரிடம் கூறினார்.
நகையை பறிமுதல் செய்ய, நேற்று காலை 6:00 மணிக்கு அவரை போலீசார் அழைத்துச் சென்றனர். மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகையை மீட்டனர். திடீரென மண்ணில் புதைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, போலீஸ்காரர் தருணை, அருண் தாக்கினார். அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது.
அங்கிருந்து அருண் தப்ப முயன்றார். அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் பம்மர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு, சரண் அடையும்படி எச்சரித்தார். அருண் கேட்கவில்லை. இதனால் அவரது வலது காலில், இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டார்.
சுருண்டு விழுந்த அருண் கைது செய்யப்பட்டு, ஹூப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.