ADDED : ஜூன் 07, 2024 11:25 PM

புதுடில்லி: 'வந்தே பாரத் ரயில்களின் சராசரி வேகம், 2020- - 21ல், மணிக்கு 84.48 கி.மீ., ஆக இருந்தது. இது, 2023- - 24ல், மணிக்கு 76.25 கி.மீ., ஆக குறைந்துள்ளது' என, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதிலளித்துள்ளது.
நம் நாட்டில், 2019 பிப்ரவரியில், வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு அதிவேக ரயில். இந்த ரயில், அதிகபட்சமாக 160 கி.மீ., வேகத்தில் ஓடக் கூடியது.
எனினும், டில்லி- - ஆக்ரா வழித்தடத்தைத் தவிர, பொருத்தமற்ற பாதையின் காரணமாக, நாட்டின் மற்ற வழித்தடங்களில், வந்தே பாரத் ரயிலால், 130 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்ல முடியாது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், வந்தே பாரத் ரயில்களின் வேகம் குறித்த தகவல்களை, ரயில்வே அமைச்சகத்திடம் கேட்டிருந்தார்.
இதற்கு ரயில்வே அமைச்சகம் அளித்த பதில்:
வந்தே பாரத் ரயில்களின் சராசரி வேகம், 2020 - 21ல், மணிக்கு 84.48 கி.மீ., ஆக இருந்தது. இது, 2022 - 23ல், மணிக்கு 81.38 கி.மீ., ஆகவும்; 2023 - 24ல், மணிக்கு 76.25 கி.மீ., ஆகவும் குறைந்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில், ரயில்வே உட்கட்டமைப்பு பணிகள் நடந்து வருவதால், வந்தே பாரத் ரயில்கள் மட்டுமின்றி, பல்வேறு ரயில்களும் மிகவும் முன்னெச்சரிக்கையாக வேகத்தை குறைத்து இயங்கி வருகின்றன. இது தவிர, புவியியல் அமைப்பு, தீவிர வானிலை மாற்றம் போன்றவற்றால், ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.
ஒருசில ரயில்கள், கடினமான நிலப்பரப்பு பகுதிகளில் இயங்குகின்றன. மேலும், உயரம் குறைவான மலைத்தொடர்கள் வழியாகவும் ரயில்கள் செல்கின்றன.
இது போன்ற சமயங்களில், ரயில்கள் மெதுவாக செல்வது தவிர்க்க முடியாதது. மழைக் காலங்களில் அனைத்து ரயில்களுக்கும், அதிகபட்சமாக, 75 கி.மீ., வேகத்தில் செல்வது என்பது மிகவும் சவாலானது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.