ரயில் தண்டவாளத்தில் மின்கம்பி ஓட்டுனரால் அசம்பாவிதம் தவிர்ப்பு
ரயில் தண்டவாளத்தில் மின்கம்பி ஓட்டுனரால் அசம்பாவிதம் தவிர்ப்பு
ADDED : மார் 31, 2024 05:06 AM

துமகூரு : துமகூரில் ரயில்வே தண்டவாளத்தில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து கிடப்பதைப் பார்த்த ரயில் ஓட்டுனர், ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து ஹாசனுக்கு நேற்று முன்தினம் காலை 11:30 மணிக்கு ரயில் புறப்பட்டது. மதியம் 12:15 மணியளவில் துமகூரு மாவட்டம் குனிகல் புறநகர் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது ரயில் தண்டவாளத்தில், உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை, ரயில் ஓட்டுனர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ரயிலை நிறுத்தினார்.
இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து பெங்களூரில் இருந்து ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள், அங்கு சென்று மின்கம்பியை சரி செய்தனர். இரண்டரை மணி நேரம் தாமதமாக, மதியம் 2:45 மணியளவில், ரயில் ஹாசனை நோக்கிப் புறப்பட்டது.
ஓட்டுனரின் சமயோஜிதத்தால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவரின் பணியை அதிகாரிகள், பயணியர் பாராட்டினர்.
� ரயில்வே தண்டவாளத்தில் அறுந்து விழுந்திருந்த உயர் அழுத்த மின் கம்பி. � ரயில் முன் காத்திருந்த பயணியர். இடம்: குனிகல், துமகூரு.

