ADDED : மார் 07, 2025 09:52 PM

பாலக்காடு; பாலக்காட்டில், 'இளைஞர்களிடையே போதைப்பொருள் துஷ்பிரயோகம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிலரங்கு நடத்தப்பட்டது.
கேரளா மாநிலம், பாலக்காடு ஐ.ஐ.டி., உன்னத் பாரத் அபியான் (யு.பி.ஏ) பிராந்திய ஒருங்கிணைப்பு நிறுவனம் (ஆர்.சி.ஐ), பாலக்காடு இந்திய மருத்துவ சங்கம் ஒருங்கிணைந்து 'இளைஞர்களிடையே போதைப்பொருள் துஷ்பிரயோகம்' என்ற தலைப்பில், பாலக்காடு தனியார் ஹோட்டலில் விழிப்புணர்வு பயிலரங்கு நடத்தப்பட்டது.
உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களுக்கு போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெங்களூரு தேசிய மனநிலை சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவன பேராசிரியர் வெங்கட லட்சுமி நரசிம்மா, மூத்த மனநல மருத்துவரும் இந்திய மருத்துவ சங்கம் பாலக்காடு கிளை முன்னாள் தலைவருமான ரமணன் ஏறாட்டு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
போதைப்பொருள் துஷ்பிரயோகத்தால் மனநிலை பாதிப்பு மற்றும் சமூக தாக்கம், அறிகுறிகள் மற்றும் பயனுள்ள தலையீடுகள் போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடந்தது.
மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிந்து தடுப்பதில் ஆசிரியர்களின் பங்கு, மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகப் பிரச்னைகளைக் கையாள்வதில் சமூக விழிப்புணர்வின் முக்கியத்துவம் குறித்து பயிலரங்கில் விவாதம் நடந்தது.