-துருக்கி ஆப்பிள் இறக்குமதி நிறுத்தம் ஆசாத்பூர் மண்டி நிர்வாகம் முடிவு
-துருக்கி ஆப்பிள் இறக்குமதி நிறுத்தம் ஆசாத்பூர் மண்டி நிர்வாகம் முடிவு
ADDED : மே 16, 2025 08:36 PM

புதுடில்லி:துருக்கி நாட்டில் இருந்து ஆப்பிள் இறக்குமதி செய்வதை நிறுத்த, ஆசியாவின் மிகப்பெரிய பழம் மற்றும் காய்கறி மார்க்கெட்டான ஆசாத்பூர் மண்டி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
புதுடில்லி ஆசாத்பூரில் அமைந்துள்ள பழம் மற்றும் காய்கறி மண்டி ஆசியாவிலேயே மிகப்பெரிய மொத்த விற்பனை மார்க்கெட்டாக திகழ்கிறது.
நாடு முழுதும் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆசாத்பூர் மார்க்கெட் வியாபாரிகள் இறக்குமதி செய்கின்றனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம், அப்பாவி சுற்றுலா பயணியர் மீது தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர்.
அதற்கு பதிலடி கொடுத்த நம் ராணுவம், 'ஆப்பரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கை வாயிலாக பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்து நூற்றுக்கணக்கான பயங்கர்வாதிகளை கொன்றனர்.
இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் நம் எல்லையோர கிராமங்களில் தாக்குதல் நடத்தி அப்பாவி கிராம மக்களை கொன்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்த, மேற்காசிய நாடான துருக்கி ஆயுதங்கள் மற்றும் அவற்றை இயக்கும் ஆப்பரேட்டர்கள் வழங்கி உதவி செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, துருக்கி நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில், ஆசாத்பூர் மண்டி தலைவர் மீதாராம் கிருப்லானி கூறியதாவது: துருக்கி நாட்டில் இருந்து ஆப்பிள் மற்றும் இதர விளைபொருட்களை இறக்குமதியை நிறுத்த முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே ஆர்டர் செய்த பழங்கள் மட்டும் வந்து சேரும். இனி, ஆசாத்பூர் மண்டியைச் சேர்ந்த வியாபாரிகள் துருக்கி நாட்டுக்கு எந்த ஆர்டரும் அனுப்ப மாட்டார்கள்.
நாட்டு நிலையை கவனமாக மதிப்பாய்வு செய்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக ஆசாத்பூர் மண்டி வியாபாரிகள் துருக்கி நாட்டு ஆப்பிளுக்கு முன்னுரிமை அளித்தனர். துருக்கியில் இருந்து 2024ம் ஆண்டு 1.16 லட்சம் டன் ஆப்பிள் இறக்குமதி செய்யப்பட்டது.
இருப்பினும், நம் நாட்டுக்கு எதிராக துருக்கியின் அணுகுமுறை மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக துருக்கி நாட்டுடன் வர்த்தகம் செய்து வந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் வேறு வழியில்லை.
வரும் மாதங்களில் ஆப்பிள் இறக்குமதிக்கு வேறு சப்ளையர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
நம் நாட்டின் மீதான துருக்கியின் அரசியல் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது. இது, நம் நாட்டு மக்களின் தேசிய உணர்வை புண்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.