பாபா சித்திக் கொலை; லாரன்ஸ் பிஷ்னோயை காவலில் எடுத்து விசாரிக்க மும்பை போலீசார் திட்டம்
பாபா சித்திக் கொலை; லாரன்ஸ் பிஷ்னோயை காவலில் எடுத்து விசாரிக்க மும்பை போலீசார் திட்டம்
UPDATED : அக் 18, 2024 11:43 AM
ADDED : அக் 18, 2024 11:29 AM

மும்பை: மும்பை போலீஸ் உயர் அதிகாரிகள், லாரன்ஸ் பிஷ்னோயை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என உள்துறை அமைச்சகத்தில் அனுமதி கேட்டுள்ளனர்.
மும்பையில் கடந்த அக்.,12ம் தேதி இரவு மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான பாபா சித்திக் 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் தான் கொலைக்கு காரணம் என போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தெரிய வந்தது.
இதனால், லாரன்ஸ் பிஷ்னோயை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க மும்பை போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு தடையாக இருக்கிறது. குஜராத் மாநிலம், சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோவை வேறு எந்த சிறைக்கும் அனுப்பக் கூடாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க முடியாமல் மும்பை போலீசார் திணறிக்கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், மும்பை போலீஸ் உயர் அதிகாரிகள், லாரன்ஸ் பிஷ்னோயை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என உள்துறை அமைச்சகத்தில் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கிடையில், மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கரை பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சந்தித்தார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாது:
எனது தந்தை ஏழை அப்பாவி மக்களின் உயிர்களையும், வீடுகளையும் பாதுகாத்து தனது உயிரை இழந்தார். இன்று எனது குடும்பம் உடைந்துவிட்டது. ஆனால் அவரது மரணம் அரசியல் ஆக கூடாது. நிச்சயமாக வீண் போகக் கூடாது. எனக்கு நீதி வேண்டும். என் குடும்பத்திற்கு நீதி வேண்டும். இவ்வாறு சித்திக்கின் மகன் ஜீஷன் தெரிவித்தார்.