UPDATED : செப் 07, 2024 11:19 PM
ADDED : செப் 07, 2024 11:15 PM

இம்பால் : மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. நேற்று காலை நடந்த தாக்குதலில், ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக, ஆயுதமேந்திய நபர்கள் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு இட ஒதுக்கீடு தொடர்பாக, கூகி - மெய்டி பிரிவினரிடையே, 2023 மே மாதம் மோதல் வெடித்தது.
வன்முறை
இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால், மணிப்பூரில் இயல்புநிலை திரும்பி வந்தாலும், அவ்வப்போது சில இடங்களில் சிறிய அளவில் வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன.
பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ராங் நகரில் ராக்கெட் வாயிலாக, கூகி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய நபர்கள் சமீபத்தில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், மெய்டி சமூகத்தைச் சேர்ந்த முதியவர் உட்பட இருவர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று காலை மீண்டும் வன்முறை வெடித்தது.
ஜிரிபாம் மாவட்டத்தின் நுங்சாப்பி என்ற கிராமத்தில் உள்ள வீட்டுக்குள் புகுந்த ஆயுதமேந்திய நபர்கள், அங்கு துாங்கிக் கொண்டிருந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதலை, கூகி சமூகத்தின் ஆயுதமேந்திய குழு நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, ஜிரிபாம் மாவட்ட தலைமையகத்தில் இருந்து, 7 கி.மீ., தொலைவில், மலைப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் கூகி சமூகத்தின் ஆயுதமேந்திய குழுவுக்கும், மெய்டி சமூகத்தின் ஆயுதமேந்திய குழுவுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில், ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தகவலறிந்த போலீசார், ஆயுதமேந்திய நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, அவர்கள் தப்பிச் சென்றனர்.
ஜிரிபாம் மாவட்டத்தில் மோதலை கைவிட்டு அமைதிக்கு திரும்ப, கடந்த மாதம், மெய்டி - ஹமர் பிரிவுகளின் பிரதி நிதிகள் ஒப்புக் கொண்டனர். எனினும், சுராசந்த்பூரை தளமாகக் கொண்ட கூகி குழுக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக, ஜிரிபாம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடந்து வருகிறது.
அவசர ஆலோசனை
மணிப்பூரில் மீண்டும் கலவரம் துவங்கியுள்ள நிலையில், இந்த முறை, ட்ரோன், ராக்கெட் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை ஆயுதமேந்திய குழுக்கள் பயன்படுத்தி வருவது, பாதுகாப்புப் படையினருக்கு சவாலாக உள்ளது.
ராக்கெட்டுகள் அதிக துாரம் சென்று தாக்கும் வகையில், அதற்கேற்ப அதில் வெடிமருந்துகளை நிரப்புவதற்கான பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.
தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, கிழக்கு இம்பால் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இரவு முழுதும் விளக்குகளை அணைத்து விட்டு அச்சத்துடன் கண் விழித்திருந்தனர்.
இதற்கிடையே, சுராசந்த்பூர் மாவட்டத்தின் முல்சங், லைக்கா முல்சவு ஆகிய இடங்களில் வன்முறையாளர்களின் மூன்று பதுங்கு குழிகளை, பாதுகாப்புப் படையினர் நேற்று அழித்தனர். அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
'மணிப்பூரில் இன்னும் ஆறு மாதங்களில் முழுமையாக அமைதி திரும்பும்' என, முதல்வர் பைரேன் சிங் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது கலவரம் வெடித்திருப்பது பொதுமக்களை கவலை அடையச் செய்துள்ளது.
பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பதற்காக மாநில அமைச்சரவை கூட்டத்தை நேற்று அவசரமாக கூட்டி, முதல்வர் பைரேன் சிங் ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து கவர்னர் லக் ஷ்மன் ஆச்சார்யாவை அவர் சந்தித்து பேசினார்.