ADDED : செப் 01, 2024 11:59 PM

பெங்களூரு: பெங்களூரில் சாலை பள்ளங்களை 15 நாளில் மூட வேண்டும் என்று, மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டு உள்ளார்.
பெங்களூரு நகரை, 'பிராண்ட் பெங்களூரு' ஆக மாற்ற போவதாக, துணை முதல்வர் சிவகுமார் கூறி வருகிறார். ஆனால் அதற்கான அறிகுறிகள் தென்படவே இல்லை. நகரில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக படுமோசமாக காட்சி அளிக்கின்றன.
இரவில் சாலைகளில் வாகனங்களில் வேகமாக செல்வோர், சாலை பள்ளங்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
சாலை பள்ளங்கள் பற்றி தகவல் தெரிவிக்க, 'ரஸ்தே குந்தி கமன' என்ற செயலியை, கடந்த ஆண்டு மாநகராட்சி அறிமுகப்படுத்தியது. சாலை பள்ளங்களை புகைப்படம் எடுத்து எந்த இடம் என்று, செயலியில் பதிவிட வேண்டும் என்றும், மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
ஆனால் செயலியில் பதிவிடப்படும் இடங்களிலும், பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. சாலை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவது பற்றி, தினமும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத்தை தொடர்பு கொண்டு பேசிய, துணை முதல்வர் சிவகுமார், ''அடுத்த 15 நாட்களுக்குள் நகரில் உள்ள, சாலை பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். 15 நாட்களுக்கு பின் நான் நகர்வலம் செல்வேன்.
''ஒவ்வொரு சாலையாக ஆய்வு செய்வேன். பள்ளங்கள் மூடாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று எச்சரித்து உள்ளார்.