ADDED : ஜூன் 22, 2024 02:11 AM

மூணாறு:கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கல்லார், அறுபதாம் மைல் பகுதியில் தனியார் பண்ணை சுற்றுலா மையம் உள்ளது. அதனுள் செயல்படும் யானை சவாரி மையத்தில் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் கரிந்தளம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் 62, இரண்டாம் பாகனாக இருந்தார்.
அவர் நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு சுற்றுலா பயணிகளை சவாரி அழைத்துச் செல்ல யானையை தயார் படுத்தியபோது திடீரென பாலகிருஷ்ணனை கீழே தள்ளி காலால் பல முறை மிதித்தது. பின்னர் துதிக்கையால் உடலை தூக்கி உலுக்கி துவம்சம் செய்தது. இதில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்தில் பலியானார். சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோரின் கண் முன் நடந்த கோர சம்பவத்தை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அடிமாலி போலீசார் விசாரிக்கின்றனர்.
யானை சவாரி மையத்தில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது விதிமுறைகள் மீறி செயல்பட்டதாக தெரியவந்தது. அதனால் வழக்கு பதிவு செய்தனர்.