பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வலுக்கு ஜாமின் மறுப்பு
பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வலுக்கு ஜாமின் மறுப்பு
ADDED : ஜூன் 27, 2024 06:46 AM

பெங்களூரு : பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.
ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவர் சில பெண்களை மிரட்டி, அவர்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வெளியாகின. இது குறித்து, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்தனர். விசாரணையின் போது நான்கு பெண்கள் அளித்த புகாரில், பிரஜ்வல் மீது நான்கு பலாத்கார வழக்குகள் பதிவானது.
தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பிரஜ்வலை, சிறப்பு புலனாய்வு குழுவினர் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில் தன் மீது பதிவான முதல் பலாத்கார வழக்கில் ஜாமின் கேட்டு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், பிரஜ்வல் மனு செய்தார்.
அந்த மனுவை நீதிபதி சந்தோஷ் கஜானா பட் நேற்று விசாரித்தார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெகதீஷ், மனுதாரருக்கு ஜாமின் கொடுத்தால் சாட்சிகளை அழிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என வாதிட்டார். பிரஜ்வல் தரப்பு வக்கீலும் தங்கள் வாதங்களை முன் வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிரஜ்வலின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.