ADDED : ஆக 22, 2024 02:33 AM

மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அரசு மருத்துவமனையின் முன்னாள் டீன் எனப்படும் முதல்வர் சந்தீப் கோஷ், அங்குள்ள மருத்துவக் கழிவுகளை கடத்தியதுடன், உரிமை கோரப்படாத உடல்களை விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோல்கட்டா கல்லுாரி முன்னாள் டீன் மீது...
'கேட்பார் இல்லாத சடலங்களை விற்றார்'
கோல்கட்டா, ஆக. 22-
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் செயல்படும் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டரின் உடல், அங்குள்ள கருத்தரங்கு அறையில் கடந்த 9ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக பெற்றோர் மற்றும் சக டாக்டர்கள் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்றிய சஞ்சய் ராய் என்ற தன்னார்வலர் கைது செய்யப்பட்டார். கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, இந்த வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே, இங்கு பணியாற்றிய டீன் சந்தீப் கோஷ், உடனடியாக தேசிய மருத்துவக் கல்லுாரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். இதை உயர் நீதிமன்றம் கண்டித்ததையடுத்து, அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டது.
முறைகேடு
அவரிடம், சி.பி.ஐ., போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தான் பணியாற்றிய மருத்துவமனையில் பல்வேறு முறைகேடுகளில் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, ஆர்.ஜி.கார் மருத்துவமனையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் அக்தர் அலி கூறியதாவது:
முன்னாள் டீன் சந்தீப் கோஷ் பல ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். மருத்துவக் கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க அவர் பல முறை லஞ்சம் வாங்கியுள்ளார்.
லஞ்சம்
ஊசி போட பயன்படுத்திய சிரிஞ்ச்கள், கையுறைகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை கடத்தியுள்ளார். அதேபோல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நோயாளிகளின் உடல்களை பெற்றுக் கொள்ள உறவினர்கள் வரவில்லை எனில், அந்த உடல்களை விற்று அதிலும் பணம் சம்பாதித்துள்ளார்.
மருத்துவக் கல்லுாரி தொடர்பான ஒப்பந்தங்களை வழங்க சம்பந்தப்பட்டவர்களிடம் 20 சதவீதம் லஞ்சம் வாங்கியுள்ளார்.
இதன் வாயிலாக லட்சக்கணக்கான ரூபாயை கோஷ் சம்பாதித்துள்ளார். அவர் ஒரு குற்றவாளி. இது தொடர்பாக, மருத்துவ உயரதிகாரிகளுக்கு கடந்த ஆண்டே நான் பலமுறை புகார் அளித்துள்ளேன். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாட உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாமதம்
இருப்பினும், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. பலமுறை நடந்த விசாரணையில், பெண் டாக்டர் மரணம் தொடர்பாக முன்னுக்கு பின் முரணான தகவலை அவர் அளித்ததை அடுத்து, சந்தீப் கோஷிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதேசமயம், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆதரவாக எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகாததால், அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.