பலாத்கார வழக்கில் 'பல்டி' ஆம் ஆத்மி 'மாஜி' விடுதலை
பலாத்கார வழக்கில் 'பல்டி' ஆம் ஆத்மி 'மாஜி' விடுதலை
ADDED : செப் 12, 2024 09:51 PM
ரோஸ் அவென்யூ:புகார்தாரர் 'பல்டி' அடித்ததைத் தொடர்ந்து பலாத்கார வழக்கில் இருந்து ஆம் ஆத்மியின் முன்னாள் அமைச்சர் சந்தீப் குமாரை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விடுதலை செய்தது.
ரேஷன் கார்டு கேட்டு வந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் அமைச்சராக இருந்த சந்தீப் குமார் மீது புகார் எழுந்தது.
இந்த புகார் தொடர்பாக 2016ல் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் அமைச்சர் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து ஆளும் ஆம் ஆத்மி உத்தரவிட்டது. இதையடுத்து தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் சந்தீப் குமாருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், 2019ம் ஆண்டு, லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரித்ததற்காக சட்டமன்றத்தில் இருந்து சந்தீப் குமார் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹரியானா பா.ஜ.,வில் இணைந்தார். ஆனால் சில மணிநேரங்களிலேயே தனது கடந்த காலத்தை மறைத்ததாகக் கூறி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
சந்தீப் குமார் மீதான பாலியல் வழக்கு தொடர்பாக ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் டில்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் சந்தீப் குமார் சார்பில் வக்கீல்கள் சஞ்சய் குப்தா, ராஜ்கமல் ஆர்யா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
இந்த வழக்கு விசாரணையின்போது, முக்கிய சாட்சியான புகார்தாரர் என்று கூறப்படும் பெண், பிறழ்சாட்சியம் அளித்தார். 'சந்தீப் குமார் என்னை பலாத்காரம் செய்யவில்லை. அப்படிப்பட்ட சம்பவமே நடக்கவில்லை. நான் சந்தீப் குமார்வீட்டிற்கு செல்லவே இல்லை. 2016ம் ஆண்டிற்கு முன்பே என்னிடம் ரேஷன்கார்டு உள்ளது' என, குறுக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் பெண் 'பல்டி' அடித்தார்.
முந்தைய வாக்குமூலத்தையும் அவர் மறுத்தார். இதையடுத்து வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் சந்தீப் குமாரை விடுவித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

