அமைச்சர் பதவியை எதிர்பார்க்கும் பல்லாரி காங்., - எம்.எல்.ஏ.,க்கள்
அமைச்சர் பதவியை எதிர்பார்க்கும் பல்லாரி காங்., - எம்.எல்.ஏ.,க்கள்
ADDED : பிப் 26, 2025 11:13 PM
பல்லாரி: நாகேந்திரா உட்பட பல்லாரியின் ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், அமைச்சர் பதவி எதிர்பார்க்கின்றனர்.
பல்லாரி மாவட்டத்தில் பல்லாரி சிட்டி, பல்லாரி ரூரல், கம்பிளி, சிருகுப்பா, சண்டூர் என்று ஐந்து சட்டசபை தொகுதிகள்உள்ளன.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில் ஐந்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. சீனியர் எம்.எல்.ஏ., என்ற அடிப்படையில் நாகேந்திராவுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.
பழங்குடியினர் நல அமைச்சராக இருந்தார். வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டால், பதவியை ராஜினாமாசெய்தார். முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமினில் வந்தார்.
மீண்டும் அமைச்சர் பதவி எதிர்பார்க்கிறார். அவரை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்து கொள்ள, முதல்வர் சித்தராமையாவும் ஆர்வமாக உள்ளார். ஆனால் நாகேந்திராவுக்கு மீண்டும் பதவி கிட்டும் காலம் இன்னும் கனிந்து வரவில்லை.
இதற்கிடையில் கம்பிளி, சிருகுப்பா தொகுதியில் இருந்து இரண்டு முறை வெற்றி பெற்ற கணேஷ், நாகராஜா ஆகியோரும் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்க ஆரம்பித்து உள்ளனர்.
முதல்முறை பல்லாரி நகர தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற பரத் ரெட்டிக்கும் அமைச்சர் பதவி மீது ஆசை வந்து உள்ளது.
சண்டூர் எம்.எல்.ஏ.,வாக இருந்த துக்காராம், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி., ஆனார். எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, அவருக்கு அமைச்சர் ஆகும் ஆசை இருந்தது.
இடைத்தேர்தலில் துக்காராம் மனைவி அன்னபூர்ணா வெற்றி பெற்றார். தனக்கு கிடைக்காத அமைச்சர் பதவியை மனைவிக்கு வாங்கி கொடுக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறார்.
இதனால் ஐந்து பேரில் யாருக்கு, அமைச்சர் பதவி கொடுப்பது என்று குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இதனாலேயே நாகேந்திராவை மீண்டும் அமைச்சரவையில் சோத்து கொள்ள தாமதம் ஆவதாக சொல்லப்படுகிறது.