மூங்கில் மரத்தால் வடிவமைக்கப்படும் பம்பு பஜார் மெட்ரோ ரயில் நிலையம்
மூங்கில் மரத்தால் வடிவமைக்கப்படும் பம்பு பஜார் மெட்ரோ ரயில் நிலையம்
ADDED : ஜூன் 30, 2024 10:31 PM
பெங்களூரு : மூங்கில் மரங்களால் வடிவமைக்கப்படும், இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் நிலையம் பெங்களூரில் அமைக்கப்பட உள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், நகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையிலும், மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
செல்லகட்டா- ஒயிட்பீல்டு; நாகசந்திரா- சில்க் இன்ஸ்டிடியூட் இடையில் தற்போது மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. ஆர்.வி.,ரோடு- பொம்ம சந்திரா ரயில் பாதை பணிகள் முடிந்துள்ளன.
நாகவாரா- காலேன அக்ரஹாரா; சென்ட்ரல் சில்க் போர்டு- விமான நிலையம் இடையில் மெட்ரோ பாதைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் நாட்டின் மூங்கிலால் வடிவமைக்கப்பட்ட, முதல் மெட்ரோ ரயில் நிலையம், பெங்களூரில் அமைக்கப்பட உள்ளது.
நாகவாரா- காலேன அக்ரஹாரா மெட்ரோ ரயில் பாதையில், பம்பு பஜார் மெட்ரோ ரயில் நிலையம் அமைகிறது. இந்த ரயில் நிலையத்தின் வெளிப்புற, உட்புற தோற்றங்கள் மூங்கிலால் வடிவமைக்கப்பட உள்ளது.
இது குறித்து இந்திய மூங்கில் சங்கத்தின் தலைவரும், முன்னாள் முதன்மை தலைமை வன பாதுகாவலருமான புனாதி ஸ்ரீதர் கூறியதாவது:
மூங்கிலை பயன்படுத்தி மெட்ரோ ரயில் நிலையத்தை வடிவமைப்பது தொடர்பாக, பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் எங்களை அணுகியது. மூங்கிலுக்கு ஆங்கிலத்தில் பாம்போ என்று பெயர். இதனால் பம்பு பஜார் மெட்ரோ ரயில் நிலையத்தில், மூங்கில் பயன்படுத்தி வடிவமைக்க உள்ளோம்.
இதற்காக திரிபுரா மாநிலத்தில் இருந்து பம்புசா துல்டா மரம் கொண்டு வரப்படும்.; நாகவாரா- காலேன அக்ரஹாரா மெட்ரோ ரயில் பாதையில், ஜெயதேவா மருத்துவமனையில் இருந்து, மீனாட்சி கோவில் வரை 5 கி.மீ.,க்கு, மெட்ரோ ரயில் பாதையின் கீழ், பம்புசா துல்டா மரக்கன்றுகளையும் நட உள்ளோம்.
இந்த இரண்டு பணிகளும் அடுத்த மூன்று மாதத்தில் துவங்கும். இதற்கு 5 கோடி ரூபாய் முதல் 6 கோடி ரூபாய் வரை செலவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.