ADDED : மே 26, 2024 06:42 AM

சென்னை: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் மீதான தடை, மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2013ம் ஆண்டு, குட்கா, பான்பராக், புகையிலை, நிக்கோட்டின் கலந்த மெல்லக்கூடிய உணவு பொருட்கள் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, விற்பனை போன்றவற்றுக்கு, தமிழக அரசு தடை விதித்தது.
ஒவ்வொரு ஆண்டும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. குட்கா, பான்மசலா மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தாலும், தடையை மீறி திருட்டுத்தனமாக அவை விற்பது தொடர்கிறது.
போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து, விற்போரை கைது செய்து வருகின்றனர். கடந்த 2022ம் ஆண்டு, குற்றத் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர், 1.18 கோடி ரூபாய் மதிப்புள்ள, 7,855 கிலோ புகையிலைப் பொருட்கள்; 35.60 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில், 2.65 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2,654 கிலோ கஞ்சா, 54 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3,599 கிலோ புகையிலைப் பொருட்கள், உள்ளூர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் இந்த ஆண்டு மட்டும், குட்கா, மாவா, புகையிலை பொருட்கள் விற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட, 23 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்ற, 285 கடைகள் சீல் வைக்கப்பட்டன.
கடந்த ஏழு நாட்களில், 51 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து, 235 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் மீதான தடை, மே 23 முதல் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்விபரம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.