ADDED : மே 03, 2024 10:27 PM
புதுடில்லி:சண்டிகரில் உள்ள பஞ்சாப் முதல்வரின் அதிகாரப்பூர்வ அரசு பங்களாவுக்கு வெளியே உள்ள சாலையை சோதனை அடிப்படையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
பஞ்சாப் முதல்வரின் அதிகாரப்பூர்வ அரசு பங்களா சண்டிகரில் அமைந்துள்ளது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக, முதல்வர் பங்களா இருந்த சாலை மூடப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால், நயாகோன் மற்றும் சுக்னா ஏரிக்கு இடைப்பட்ட துாரத்தைக் கடக்க மக்கள் மாற்றுப்பாதையில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உத்தரவு
இதுகுறித்து, பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கை ஏப்ரல் 22ல் விசாரித்த உயர் நீதிமன்றம், “சண்டிகரில் பஞ்சாப் முதல்வரின் பங்களா அருகே அமைந்திருக்கும் சண்டிகரில் உள்ள சுக்னா ஏரியை நயாகோனுடன் இணைக்கும் 500 மீட்டர் சாலையை மே 1ம் தேதி சோதனை முறையில் திறக்க உத்தரவிட்டது.
மேலும், வேலை நாட்களில் காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையிலும் இந்தச் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட, சண்டிகர் போலீசுக்கு உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக 1980ல் மூடப்பட்ட இந்தச் சாலையை மீண்டும் திறக்க மத்திய அரசு மற்றும் பஞ்சாப் அரசு ஆகியவை தங்களது ஆட்சேபனையை தெரிவித்துள்ளன.
விசாரணை
அந்த ஆட்சேபனை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே, இந்தச் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம் செப்டம்பர் 2ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின், இந்த வழக்கில் விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.