ADDED : செப் 09, 2024 03:42 AM

கொச்சி : கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு எர்ணாகுளம் மாவட்டத்தின் அங்கமாலியில் உள்ள அரசு மருத்துவமனையில் சமீபத்தில் நடிகர் பஹத் பாசில் நடிப்பில் உருவாகும் மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
இதை காண கூட்டம் கூடியதால், பரிசோதனைக்கு வந்த நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து, அங்கமாலி தாலுகா மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமைகள் கமிஷன் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியது.
அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், 'மருத்துவமனையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டாலும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது' என, குறிப்பிடப்பட்டது.
இதை மாநில மனித உரிமைகள் கமிஷன் ஏற்க மறுத்தது. இதுதொடர்பாக கமிஷனின் உறுப்பினர் பீணா குமாரி பிறப்பித்த உத்தரவு:
அவசர சிகிச்சைப் பிரிவு உட்பட 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அரசு மருத்துவமனையில் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்தது தவறு. இதனால், நோயாளிகள் பாதிக்கப்படவில்லை என்பதை ஏற்க முடியாது. இதுபோன்ற சினிமா படப்பிடிப்புகளை அரசு மருத்துவமனைகளில் நடத்த தடை விதிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.