ADDED : செப் 07, 2024 07:33 AM

கடலோர கர்நாடகாவின் மங்களூரு, உடுப்பியில் மிகவும் பிரசித்தி பெற்ற நொறுக்கு தீனி 'மங்களூரு பன் அல்லது வாழைப்பழ பூரி!'
முன்னொரு காலத்தில் கடலோர கர்நாடகாவில் தாய் ஒருவர், தனது குழந்தைகள் சாப்பிட பேக்கரி பன் வாங்கி கொடுத்து வந்துள்ளார். தினமும் குழந்தைகள் பன் கேட்டு தொந்தரவு செய்தன. வீட்டு உணவு சாப்பிடாமல், கடைகளில் விற்கும் பன் தான் வேண்டும் என அடம் பிடிக்க துவங்கினர்.
எளிய முறை
பொறுமை இழந்த அவர், கடையில் வாங்காமல், வீட்டிலேயே எளிய முறையில், குழந்தைகளுக்கு பிடித்தமான பன் தயாரிக்க முடிவு செய்தார்.
நீண்ட நாள் யோசனைக்கு பின், வாழைப்பழத்தில் பூரி போன்று செய்யலாம் என முடிவு செய்தார். அதன்படி, சமையல் அறையில் இருந்த சில வாழைப்பழங்களை எடுத்து பிசைந்து அதில் கீழே குறிப்பிட்டுள்ள சில பொருட்களை சேர்த்து, 'பன்' போன்று வடிவமைத்து, எண்ணெயில் பொறித்தார்.
இதன் பெயர் என்ன என்று குழந்தைகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர், 'அம்மா பன்' என்று கூறி, குழந்தைகளுக்கு பரிமாறினார். அதன் சுவை பேக்கரி பன் போன்று இருந்ததால், குழந்தைகள் விரும்பி சாப்பிட்டனர்.
அம்மா பன்
வாழைப்பழ பன்கள் வெளியில் அழகான நிறத்திலும், உள்ளே மிகவும் மென்மையாகவும் இருந்தது. நாளடைவில் அக்கம் பக்கத்தினருக்கு கூறி, அவர்களும் செய்ய துவங்கினர். நாளடைவில், 'அம்மா பன்' என்ற பெயர் மாறி, 'மங்களூரு பன்' என பெயர் மாறியது.
இந்த மங்களூரு பன், எண்ணெயில் பொறித்தாலும், அவை உண்ணும் போது எண்ணெயாக இருக்காது. அதே வேளையில், சாதாரண பூரி சுடுவது போன்று இருக்காது. அதற்கு தேவையானதை வைத்தே செய்ய வேண்டும்.
மங்களூரு பன்கள், இரண்டு நாட்கள் மட்டுமே வைத்து சாப்பிட உகந்தது. எனவே, 'டிரிப்' செல்லும் போது இதை செய்து எடுத்து செல்லலாம்.
மங்களூரு பன்
தேவையான பொருட்கள்
l ஒரு கப் மைதா
l பழுத்த வாழைப்பழங்கள் 2
l மூன்று முதல் ஐந்து டீஸ்பூன் சர்க்கரை
l இரண்டு முதல் மூன்று டீஸ்பூன் தயிர்
l ஒரு டீஸ்பூன் நெய்
l முக்கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா
l ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகள்
l ஒரு டீஸ்பூன் உப்பு
l பொறிக்க தேவையான எண்ணெய்
மைதாவா...கோதுமையா?
l பாரம்பரிய மங்களூரு பன், மைதாவில் செய்யப்பட்டவை. உங்களுக்கு வேண்டுமானால் மைதாவுக்கு பதிலாக கோதுமையோ அல்லது இரண்டையும் கலந்து செய்யலாம்
l ஏற்கனவே சிறிது இனிப்பாகவும், சிறிது உப்பாகவும் இருக்கும். எனவே, கூடுதலாக சர்க்கரை சேர்க்க வேண்டாம்
l மங்களூரு பன்னில் ஜீரகம் சேர்க்கப்படுகிறது
l காரமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், சிறிதளவு பெப்பர் துாள் அல்லது ஏலக்காய் துாள் சேர்க்கலாம்.
- நமது நிருபர் -