ADDED : ஜூலை 16, 2024 12:47 AM

மும்பை, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர் என்ற இளம்பெண் யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில் 821வது இடத்தை பிடித்தார். பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், புனே உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
அரசால் வழங்கப்படாத வசதிகளை இவர் அத்துமீறி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. தன் சொகுசு காரில் அரசு பெயர் பலகை மற்றும் சிவப்பு - நீல சுழல் விளக்கு பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
விதிமீறலில் ஈடுபட்டதை அடுத்து பூஜா, வாஷிம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள அவர், ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தபோது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை முறைகேடாக சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் கமிஷனை சமீபத்தில் அமைத்தது.
இந்நிலையில், அடுத்த சர்ச்சையில் பூஜா சிக்கியுள்ளார். மஹாராஷ்டிராவில் உள்ள பல்கோன் கிராமத்தின் ஊர் தலைவராக பூஜாவின் தாய் மனோரமா உள்ளார். அவரும், அவரது கணவரும் நிலப்பிரச்னையில் உள்ளூர் விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, மனோரமாவிடம் விசாரணை செய்ய போலீசார் அவர் வீட்டிற்கு விரைந்தனர்.
அங்கு அவர் இல்லாததை அடுத்து, மாயமான மனோரமா - திலீப் தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மஹாராஷ்டிரா போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கூறுகையில், “நான் எந்த குற்றமும் செய்யவில்லை. ஆனால், ஊடகங்கள் என்னை குற்றவாளி என்கின்றன. அதை நிரூபிக்க முடியுமா?,” என்றார்.