வங்கதேச வன்முறை: ராகுல் மீது பத்திரிகையாளர் குற்றச்சாட்டு
வங்கதேச வன்முறை: ராகுல் மீது பத்திரிகையாளர் குற்றச்சாட்டு
ADDED : ஆக 18, 2024 12:11 AM

புதுடில்லி: வங்கதேசத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் மீது, அந்நாட்டின் பத்திரிகையாளர் சலாஹுதீன் சோயப் சவுத்ரி குற்றஞ்சாட்டி உள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.
வலைதளத்தில் வாழ்த்து
வன்முறையாக மாறிய போராட்டத்தில், மாணவர்கள், போலீசார் உட்பட, 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் மீதும் தாக்குதல் நடந்தது.
இதற்கிடையே, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றது.
வங்கதேசத்தின் புதிய அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
பதிலளிக்கவில்லை
ராகுலின் வாழ்த்து பதிவை, வங்கதேசத்தைச் சேர்ந்த, 'பிளிட்ஸ் லைவ்' நாளிதழின் ஆசிரியர் சலாஹுதீன் சோயப் சவுத்ரி, 'ரீ டுவீட்' செய்து வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
வங்கதேசத்தை தலிபான் நாடாக மாற்றி, அந்நாட்டை சீர்குலைக்கும் உங்களின் ரகசிய சதியின் வெற்றியை நீங்கள் கொண்டாடுகிறீர்கள் என்பது எனக்கு தெரியும்.
பின், இந்தியாவை சீர்குலைத்து, நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே உங்களது திட்டம்.
லண்டனில், வங்கதேச தேசியவாத கட்சி தலைவர் தாரிக் ரஹ்மானுடன், உங்களின் ரகசிய சந்திப்பு பற்றிய என் தகவலுக்கு நீங்கள் இதுவரை பதிலளிக்கவில்லை.
இது தவிர, வங்கதேசத்தில் நடந்து வரும் ஹிந்து ஒடுக்குமுறை பற்றி ஒரு வார்த்தை கூட உங்கள் செய்தியில் நீங்கள் குறிப்பிடவில்லை. ஏன்? ஹிந்துக்களின் வாழ்க்கை உங்களுக்கு முக்கியமில்லையா?
இவ்வாறு அவர் ராகுலிடம் கேள்விகளை எழுப்பி உள்ளார்.