ADDED : மார் 09, 2025 12:07 AM
சிலிகுரி: மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டி, நம் அண்டை நாடான வங்கதேசத்தின் எல்லை அமைந்துள்ளது. இங்கு, வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி நம் நாட்டு எல்லைக்குள் நுழைந்து கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைத் தடுக்கும் வகையில், எல்லை பாதுகாப்புப் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க எல்லையில் டார்ஜிலிங் மாவட்டத்தின் கல்பாரா கிராமத்திற்கு அருகே, வங்கதேசத்தைச் சேர்ந்த 20 பேர் அடங்கிய கும்பல், சட்டவிரோதமாக நம் நாட்டு எல்லைக்குள் நேற்று முன்தினம் நுழைந்து, அங்குள்ள கால்நடைகளை கடத்திச் செல்வதாக தகவல் வெளியானது.
இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மறைந்திருந்த வங்கதேச நபர்களை சுற்றிவளைத்தனர். ஆனால், அவர்கள் கற்களை வீசி நம் வீரர்களை தாக்கினர்.
இதில் ஒருவர், நம் வீரரின் துப்பாக்கியை பறிக்க முயன்றார். இதையடுத்து, நம் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். மற்றவர்கள் தங்கள் நாட்டு எல்லைக்குள் தப்பி ஓடினர்.
இந்தச் சம்பவத்தில், எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் காயமடைந்தார்.