ஆப்கனாக மாறும் வங்கதேசம் எழுத்தாளர் தஸ்லிமா எச்சரிக்கை
ஆப்கனாக மாறும் வங்கதேசம் எழுத்தாளர் தஸ்லிமா எச்சரிக்கை
ADDED : செப் 06, 2024 03:04 AM

புதுடில்லி : “வங்கதேச இளைஞர்களை மூளை சலவை செய்யும் பயங்கரவாதிகள், அவர்களை இந்திய எதிர்ப்பு, ஹிந்து எதிர்ப்பு, பாகிஸ்தான் ஆதரவாளர்களாக மாற்றுகின்றனர். இப்படியே போனால் வங்கதேசம் இன்னொரு ஆப்கானிஸ்தானாக மாறும்,” என, எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான தஸ்லிமா நஸ்ரின் தெரிவித்துள்ளார்.
மிரட்டல்
நம் அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்தவர் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், 62. இவர், பயங்கரவாதத்துக்கு எதிராக தொடர்ச்சியாக எழுதியும், பேசியும் வந்தார்.
இவரது புத்தகங்களுக்கு வங்கதேசம் தடை விதித்தது. அவருக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப் பட்டன. இதை தொடர்ந்து, 1994ல் வங்கதேசத்தை விட்டு தஸ்லிமா வெளியேறினார். 2005ல் இருந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.
இவர் பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டி:
வங்கதேசத்தில் சர்வாதிகார அரசையும், இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் மாணவர்கள் கிளர்ந்து எழுந்தபோது, பெண் விடுதலை, மனித உரிமை, கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் அதை ஆதரித்தோம்.
ஷேக் ஹசீனா சர்வாதிகார ஆட்சி நடத்தினார்.
அடிப்படைவாதிகளை ஊக்குவித்ததுடன், கருத்து சுதந்திரத்தை ஒடுக்கினார். அவரை நீக்கிய பின் ஜனநாயக ரீதியில் புதிய அரசு அமைக்க நியாயமான தேர்தல் நடத்தப்படும் என நம்பினோம்.
தாக்குதல்
ஆனால், வங்கதேசத்தில் தற்போது நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஹிந்துக்கள் கொல்லப்படுகின்றனர். பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்படுகின்றனர், சிறையில் இருந்து பயங்கரவாதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.
வங்கதேசத்தில் நடப்பது மாணவர் இயக்கம் அல்ல. ஜிஹாதிகளும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களும் நிதி உதவி அளித்து திட்டமிட்ட பல செயல்களை அங்கு நிகழ்த்தி வருகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால், வங்கதேசம், இன்னொரு ஆப்கானிஸ்தானாகவோ, ஈரானாகவோ மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.