ADDED : ஜூலை 31, 2026 08:54 PM
– டில்லி சிறப்பு நிருபர் –
டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு வழக்கில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமின் வழங்கிய நீதிபதிகள், வழக்கில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
––––––––––––––
முந்தைய தி.மு.க., ஆட்சியில் டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் முறைகேடு, சட்டவிரோதமாக ‘பார்’கள் ஒதுக்கீடு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு பலகோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டதாக, தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 28ல் வழக்கு பதிந்தது. இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குனர் விசாகன் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், முன்ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது, “நான் நீதிபதியாவதற்கு முன், இந்த வழக்கில் வழக்கறிஞராக ஆஜராகி வாதாடியுள்ளதால், நீதி மற்றும் தொழில் முறை தர்மத்தின் அடிப்படையில், வழக்கு விசாரணையில் இருந்து விலகுகிறேன்,” என, நீதிபதி வி.மோகனா அறிவித்தார். இதையடுத்து, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய புதிய அமர்வு அமைக்கப்பட்டு மதியம் 1:00 மணிக்கு மறுவிசாரணை நடந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முதற்கட்ட விசாரணைகள் அனைத்தும் நடத்தப்பட்டுவிட்டன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், ஏற்கனவே முடிந்த விவகாரத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மீண்டும் தொடங்கியுள்ளனர். அமலாக்கத் துறை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையிலேயே, லஞ்ச ஒழிப்புத் துறை தற்போது புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளது,’’ என, வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் முன்வைத்த வாதம்:
கடந்த, 2021 – 25ம் ஆண்டு காலக்கட்டத்தில் சம்பந்தப்பட்ட நபரே அமைச்சராக இருந்தார். அப்போது வழக்கு பதிவு செய்யப்படாமல் அவர் தடுத்து வைத்திருந்தார். ஆட்சி மாற்றத்திற்குப் பின், முந்தைய ஆட்சியில் நடந்த தவறுகள் மீது நடவடிக்கை எடுக்கச் சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை.
இந்த டாஸ்மாக் முறைகேடு வழக்கில் 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. செந்தில் பாலாஜி இதுவரை எந்தெந்தத் துறைகளுக்கெல்லாம் அமைச்சராக இருந்தாரோ, அத்தனை துறைகளிலும் அவர் குற்ற வழக்குகளைச் சந்தித்துத் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடும் நபராகவே உள்ளார்.
அவர் வெளியில் இருந்தால் சாட்சிகளுக்குப் பாதுகாப்பு இருக்காது; விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இழுத்தடிப்பார். எனவே முன்ஜாமின் வழங்கக் கூடாது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி தலையிடாமல் இருப்பதையும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதையும் நாங்கள் உறுதி செய்கிறோம். எனவே, அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. முன்ஜாமின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.
செந்தில் பாலாஜி தன் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். சாட்சிகள் மீது எந்தவித ஆதிக்கமும் செலுத்தக் கூடாது; வழக்கு விசாரணையில் தலையிடக் கூடாது. நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகளைச் செந்தில் பாலாஜி மீறுவாரேயானால், அவரது முன்ஜாமின் உடனடியாக ரத்து செய்யப்படும்.
இடைப்பட்ட காலத்தில் இந்த விவகாரத்தில் ஏதேனும் நிவாரணம் பெற விரும்பினாலோ அல்லது நீதிமன்றத்தின் கவனத்திற்கு தகவல் தெரிவிக்க விரும்பினாலோ லஞ்ச ஒழிப்புத் துறை உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
