எம்.எல்.ஏ.,க்களிடம் ரூ.50 கோடி பேரம்: சித்தராமையா குற்றச்சாட்டு
எம்.எல்.ஏ.,க்களிடம் ரூ.50 கோடி பேரம்: சித்தராமையா குற்றச்சாட்டு
ADDED : மார் 23, 2024 06:54 AM

பெங்களூரு: ''ஊழலின் தந்தையே பா.ஜ., தான். எங்கள் எம்.எல்.ஏ.,க்களிடம் 50 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசுகின்றனர்,'' என்று, முதல்வர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஜனநாயகம், அரசியல் சாசனம் மீது, பா.ஜ.,வுக்கு நம்பிக்கை இல்லை. சர்வாதிகாரத்தில் மட்டுமே நம்பிக்கை உள்ளது. தோல்வி பயத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்குகின்றனர்.
லோக்சபா தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும். இம்முறை பா.ஜ.,வை நிராகரித்து, இந்தியாவை நாட்டு மக்கள் காப்பாற்றுவர் என்ற நம்பிக்கை உள்ளது.
பா.ஜ., எங்களுக்கு எவ்வளவு பிரச்னை கொடுத்தாலும், போராட்ட பாதையில் சென்று எதிர்கொள்வோம். சிறிய தொழில்நுட்ப பிரச்னைக்காக, கட்சியின் வங்கி கணக்கை முடக்கியது, சர்வாதிகார அணுகுமுறை. மக்கள் பிரச்னைக்காக போராடும் காங்கிரஸ் கட்சியை, ஒடுக்கும் முயற்சி நடக்கிறது.
குடியுரிமை திருத்த சட்டம், புல்வாமா தாக்குதல், அயோத்தி ராமர் கோவில் பிரச்னைகளை முன்வைத்து, இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்தியர்களை உணர்வு பூர்வமாக ஏமாற்றுவீர்கள். மக்கள் படும் கஷ்டங்களுக்கு பதில் சொல்லாமல், உணர்வுபூர்வமான விஷயத்தை பேசுகிறீர்கள்.
பா.ஜ., ஊழலின் பிதாமகன். ஆப்பரேஷன் தாமரை மூலம் எம்.எல்.ஏ.,க்களை இழுத்தனர். இப்போது மறுபடியும் துவங்கி உள்ளனர். எங்கள் எம்.எல்.ஏ.,க்களிடம் 50 கோடி ரூபாய் தருவதாக, பேரம் பேசுகின்றனர்.
இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு நாங்களே செலவு செய்கிறோம் என்று கூறுகின்றனர். அந்த பணம் எங்கிருந்து கிடைத்தது. பணக்காரர்கள் எல்லாம் பா.ஜ.,வில் தான் இருக்கின்றனர். பா.ஜ.,வின் வங்கி கணக்குகளையும் முடக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.

