காங்கிரசின் பசனகவுடா பாதர்லி போட்டியின்றி எம்.எல்.சி.,யானார்
காங்கிரசின் பசனகவுடா பாதர்லி போட்டியின்றி எம்.எல்.சி.,யானார்
ADDED : ஜூலை 06, 2024 06:21 AM

பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் இருந்து, மேலவையின் ஒரு இடத்துக்கு நடந்த தேர்தலில், காங்கிரசின் பசனகவுடா பாதர்லி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., சீட் எதிர்பார்த்தார். ஆனால் மூத்த தலைவர்கள் பலருக்கு பதிலாக, புதியவர்களுக்கு மேலிடம் 'சீட்' கொடுத்தது. இதனால் அதிருப்தியடைந்த ஜெகதீஷ் ஷெட்டர், பா.ஜ.,வை விட்டு விலகி, காங்கிரசுக்கு தாவினார்.
ஹூப்பள்ளி - தார்வாட் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். அதன்பின் இவரை காங்., மேலிடம், எம்.எல்.சி.,யாக்கியது.
லோக்சபா தேர்தல் நெருக்கத்தில் திடீரென, காங்கிரசுக்கு முழுக்கு போட்டு, பா.ஜ.,வுக்கு திரும்பினார்.
லோக்சபா தேர்தலில் பெலகாவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.,யானார். இவரால் காலியான மேலவையின் ஒரு இடத்துக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இதில் எதிர்க்கட்சிகள் பா.ஜ., - ம.ஜ.த., போட்டியிடாமல் ஒதுங்கின.
காங்கிரஸ் சார்பில் பசனகவுடா பாதர்லி மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே இவரே போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரியுமான சட்டசபை செயலர் விசாலாட்சி, நேற்று மாலையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
பசனகவுடா பாதர்லியின் பதவி காலம், 2028 ஜூன் 14 வரை இருக்கும். இவரால் மேலவையில், காங்கிரஸ் உறுப்பினர் பலம் 33 ஆக அதிகரித்துள்ளது.