கேரளாவில் முதன் முறையாக மாட்டுபட்டியில் பேட்டரி படகு
கேரளாவில் முதன் முறையாக மாட்டுபட்டியில் பேட்டரி படகு
ADDED : மே 08, 2024 01:39 AM

மூணாறு:கேரளாவில் முதன் முறையாக மாட்டு பட்டி அணையில் பேட்டரியில் இயங்கும் படகு நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
மூணாறு அருகே முக்கிய சுற்றுலா பகுதியான மாட்டுபட்டி அணையில் மாவட்ட சுற்றுலாதுறை, மின்வாரியத்தின் ஹைடல் டூரிசம் அமைப்புகள் சார்பில் சுற்றுலாப் படகுகள் இயக்கப்படுகின்றன. டீசலில் இயங்கும் அவற்றால் தண்ணீர் மாசு படுவதுடன் படகுகளின் சப்தம் மூலம் வனவிலங்குகள் பல்வேறு விதங்களில் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதை தவிர்க்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் படகுகளை இயக்க ஹைடல் டூரிசம் முடிவு செய்தது. அதற்கான சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஜூலை 25ல் நடந்தது. அது வெற்றி பெற்றதால் பேட்டரி படகுகளை இயக்க மத்திய துறைமுகத் துறை அனுமதி அளித்தது.
முதல் கட்டமாக ரூ.50 லட்சம் செலவில் 20 இருக்கைகளைக் கொண்ட பேட்டரியில் இயங்கும் படகு நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. கேரள மாநிலத்தில் முதன் முதலாக மாட்டுபட்டி அணையில் பேட்டரி படகு இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

