ADDED : ஏப் 04, 2024 10:32 PM
மைசூரு : மைசூரு நகரின், தான்ட்யா தொழிற் பகுதியில் யுனைடெட் புருவரீஸ் லிமிடெட் தொழிற்சாலை உள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில், இங்கு பெருமளவில் மதுபானம் பதுக்கி வைத்துள்ளதாக, கலால் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதேபோல, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், தொலைபேசியில் தகவல் கூறப்பட்டது.
எனவே, நேற்று காலை, கலால் துறை அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் தொழிற்சாலைக்கு சென்று சோதனை நடத்தினர். வெவ்வேறு கம்பெனிகளின் பீர் பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பீர் பாட்டில்களை கலால் துறை அதிகாரிகள், பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 98.55 கோடி ரூபாயாகும். மதுபானம் தயாரிக்கும் கச்சா பொருட்களையும் கைப்பற்றினர். இது தொடர்பாக, 17 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
தேர்தலுக்கு வாக்காளர்களுக்கு வினியோகிக்கும் நோக்கில், இவற்றை பதுக்கி வைத்திருக்கலாம் என, தேர்தல் அதிகாரிகள் கருதுகின்றனர்.

