2014ம் ஆண்டுக்கு முன் நாட்டில் ஊழல்கள் அதிகம்: காங்கிரசை விளாசிய மோடி
2014ம் ஆண்டுக்கு முன் நாட்டில் ஊழல்கள் அதிகம்: காங்கிரசை விளாசிய மோடி
UPDATED : மே 01, 2024 06:19 PM
ADDED : மே 01, 2024 05:56 PM

ஆமதாபாத்: 2014ம் ஆண்டுக்கு முன், நாட்டில் பயங்கரவாதம், ஊழல்கள் அதிகம் நடந்தன என பிரதமர் மோடி கூறினார்.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: 2019ம் ஆண்டு பா.ஜ., ஆட்சியை தக்க வைக்காது என எதிர்க்கட்சியின் கூறினர். 2019ல் மக்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்து ஆதரவு தெரிவித்தனர். எனது மூன்றாவது பதவிக்காலத்தில் நாடு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்.
பயங்கரவாதம்
தேசத்திற்கு சேவை செய்ய மக்கள் அனைவரும் என்னை 2014ம் ஆண்டு டில்லிக்கு அனுப்பி உள்ளார்கள். 2014ம் ஆண்டுக்கு முன், நாட்டில் பயங்கரவாதம், ஊழல்கள் அதிகம் நடந்தன. அப்போது இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட்டார்கள். ஆனால் நான் கடுமையாக உழைத்தேன். அந்தச் சூழலிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முயற்சித்தேன்.
போலி வீடியோக்கள்
அரசியலமைப்பை மாற்றுவோம், இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் பேசுவதை மக்கள் கேட்கவில்லை என்பதால் போலி வீடியோக்களை உருவாக்க துவங்கி உள்ளனர். மோடியின் உத்தரவாதங்கள் வெறும் வாக்குறுதிகள் அல்ல, இந்தியாவின் திறமை பற்றிய எனது அனுபவம்.
நான் முதன் முறையாக லோக்சபாவுக்கு வந்தபோது டீ விற்பவர் என்ன செய்வார் என காங்., கேலி செய்தது. என் குடும்பத்தை பற்றி தனிப்பட்ட கருத்துகளை கூறி விமர்சித்து வருகின்றனர். லோக்சபா தேர்தல் முதல் கட்டத்தில் தோற்ற இண்டியா கூட்டணி 2வது கட்டத்தில் முற்றிலும் சரிந்தது.
பணிகள் குறித்த பட்டியல் தயார்
காங்கிரஸ் 272 வேட்பாளர்களைக் கூட நிறுத்தவில்லை. லோக்சபா தேர்தலில் பெரும்பான்மைக்கும் குறைந்த தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெறுவார்கள். மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று காங்கிரஸ் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். எனது மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த பட்டியலை நான் ஏற்கனவே தயார் செய்துவிட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.