'உயிருடன் இருந்தும் இறந்ததற்கு சமம்' பெங்களூரில் பேனர் வைத்து கோபம்
'உயிருடன் இருந்தும் இறந்ததற்கு சமம்' பெங்களூரில் பேனர் வைத்து கோபம்
ADDED : ஏப் 27, 2024 11:09 PM

பெங்களூரு: படித்தவர்கள் நிறைந்த பெங்களூரில் ஓட்டுப்பதிவு குறைந்துள்ளதால், 'ஓட்டுப் போடாதவர்கள் உயிருடன் இருந்தும் இறந்ததற்கு சமம்' என்ற பேனர் வைத்து, சிலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தின் மையமான பெங்களூரில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து இங்கு பணியாற்றி வருகின்றனர். சிலர், இங்கேயே 'செட்டில்' ஆகி, கர்நாடகவாசிகளாக வசித்து வருகின்றனர்.
படித்தவர்கள் நிறைந்த இம்மாவட்டத்தில், ஓட்டுப் போடுவதில் மட்டும் 'சோம்பேறி'களாக உள்ளனர். கடந்த முறை ஓட்டு சதவீதத்தை விட, இம்முறை அதிகரிக்க, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம், பெங்களூரு மாநகராட்சி பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தின. ஆனாலும், பெங்களூரில் ஓட்டு சதவீதம் அதிகரிக்கவில்லை.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பெங்களூரு வடக்கில் 50.51 சதவீதம்; பெங்களூரு சென்ட்ரலில் 49.75 சதவீதம்; பெங்களூரு தெற்கில் 54.12 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இம்முறை முறையே 54.42 சதவீதம்; 52.81 சதவீதம்; 53.15 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
இதனால் கோபமடைந்த சிலர், நகரின் சில இடங்களில் 'எதிர்ப்பு பதாகைகள்' வைத்துள்ளனர்.
அதில், 'தேர்தல் ஆணையம் இவ்வளவு பிரசாரம் செய்தும், ஓட்டுப் போடாமல் விலகி இருப்பது, 'உயிருடன் இருந்தும் இறந்தததற்கு சமம்' என்பது போன்று நடந்து கொண்ட பெங்களூரில் நன்கு படித்த குடிமக்களுக்கு எங்கள் அஞ்சலி' என குறிப்பிட்டுள்ளது.

