நடைபாதைக்காக பெங்., மாநகராட்சி பணிகள் வேர்கள் வெட்டப்பட்டதால் சாய்ந்த மரங்கள்
நடைபாதைக்காக பெங்., மாநகராட்சி பணிகள் வேர்கள் வெட்டப்பட்டதால் சாய்ந்த மரங்கள்
ADDED : ஜூன் 01, 2024 04:35 AM

ராஜராஜேஸ்வரி நகர் : ராஜராஜேஸ்வரி நகரில், சாலை ஓரம் நடைபாதை அமைக்க பள்ளம் தோண்டும்போது வேர்கள் வெட்டப்பட்டதால், பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. பெங்களூரு மாநகராட்சியின் செயலுக்கு இயற்கை தன்னார்வலர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு நகரில் மரக்கன்றுகள் நட, பல கோடி ரூபாய் மாநகராட்சி செலவிடுகிறது. பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் கொட்டிகேபாளையாவின் சுமனஹள்ளி சாலையில், ராமகிருஷ்ணப்பா லே - அவுட்டில் இருந்து கங்கம்மா கார்டன் வரை இருபுறமும் நடைபாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
நடைபாதை அமைக்கும் இடத்தில் மரங்கள் உள்ளதால், அதை சுற்றிலும் மண்ணை எடுத்துவிட்டு பணிகள் செய்யலாம். ஆனால், மண்ணை தோண்டுவதாக கூறி, மரத்தின் வேர்களை சேதப்படுத்தி உள்ளனர்.
இதனால் இந்த வழித்தடத்தில் இருபக்கமும் பல மரங்கள் சாய்ந்துவிட்டன. மாநகராட்சியின் பொறுப்பற்ற செயலுக்கு, அப்பகுதியினரும் இயற்கை ஆர்வலர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
ராமகிருஷ்ணப்பா லே - அவுட்டில் இருந்து கங்கம்மா கார்டன் வரை இருபுறம் இந்திரா உணவகம், உலர் குப்பை சேகரிப்பு பிரிவு, போஸ்கோ தொழிற் பயிற்சி நிலையம் உள்ளன. இங்கு நடைபாதை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.
அப்படியே நடைபாதை அமைக்க வேண்டும் என்றால், மரங்களை வேருடன் எடுத்து வைத்திருக்கலாம். மரக்கன்றுகள் நடுவதற்கு பல கோடி ரூபாயை மாநகராட்சி செலவழிக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில், மரங்களை 'கொல்வது' சரியா?
மாநகராட்சி மண்டல கமிஷனர், இணை கமிஷனர், தலைமை பொறியாளர் ஆகியோரின் அலட்சியத்தால், தேவையின்றி மரங்கள் வெட்டப்படுகின்றன.
இவ்வாறு கூறினர்.
மண்டல உதவி செயல் பொறியாளர் வரண நாராயணன் கூறுகையில், ''நான் வருவதற்கு முன்பு, இப்பகுதியில் மண் அள்ளப்பட்டுள்ளது. என் காலத்தில் பணிகள் துவங்கவில்லை,'' என்றார்.
வேருடன் சாய்ந்த மரங்களை வேறு இடத்திலாவது வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.