நடு வீதியில் பெண்ணிற்கு அடி உதை; வேடிக்கை பார்த்த பொது மக்கள்
நடு வீதியில் பெண்ணிற்கு அடி உதை; வேடிக்கை பார்த்த பொது மக்கள்
UPDATED : ஜூன் 30, 2024 07:38 PM
ADDED : ஜூன் 30, 2024 07:32 PM

கோல்கட்டா: மே.வங்க மாநிலத்தில் லோக்கல் தாதா ஒருவர் இளம்பெண்ணை சாலையில் தூக்கி எறிந்து, அடித்து துவம்சம் செய்யும் வீடியோ சமூக வலை தளத்தில் வைரலாகி உள்ளது.
மே.வங்கத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்திற்குட்பட்ட சோப்ரா பகுதியை சேர்ந்தவர் தாஜேமுல். உள்ளூர் தாதாவான இவர் திரிணாமுல் எம்எல்ஏ ஹமிதுர் ரஹ்மானின் தொண்டராக அறியப்படுகிறார். இதனிடையே அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கம்பால் அடிப்பதுடன் சாலையில் தூக்கி எறிந்து துவம்சம் பண்ணுகிறார். தொடர்ந்து ஆண் ஒருவரையும் தாக்குகிறார்.இருப்பினும் இருவர் மீதான தாக்குதலுக்கு காரணம் தெரியவி்ல்லை. அதே நேரத்தில் வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள் யாரும் தாதாவின் செயலை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாநில எதிர்கட்சிகளான பா.ஜ., மற்றும் கம்யூ.கட்சிகள் மம்தா அரசின் மீது குற்றம் சாட்டின. பா.ஜ.,வின் ஐ.டி.,பிரிவை சேர்ந்த அமித் மாளவியா எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:இந்த வகையான ஷரியா நீதிமன்றங்கள் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதை ஒட்டுமொத்த இந்திய மக்களும் அங்கீகரிக்க வேண்டும். வங்காளத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் 'சந்தேஷ்காலி' போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. மம்தாவின் ஆட்சி மேற்கு வங்காளத்திற்கு சாபக்கேடு என பதிவிட்டு உள்ளார்.
மா.கம்யூ., கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.டி.சலீம் எக்ஸ் தளத்தில் வங்காளத்தில் புல்டோசர் நீதி ஆட்சி செய்கிறது என்று விமர்சித்துள்ளார்.