மலையாள இயக்குனர் மீது பெங்காலி நடிகை புகார்: கேரள அரசுக்கு நெருக்கடி
மலையாள இயக்குனர் மீது பெங்காலி நடிகை புகார்: கேரள அரசுக்கு நெருக்கடி
ADDED : ஆக 25, 2024 12:43 AM

திருவனந்தபுரம், அத்துமீறி நடந்ததாக பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ரஞ்சித் மீது, பெங்காலி நடிகை புகார் கூறியுள்ளார். இது கேரள அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
அத்துமீறல்
மலையாள திரையுலகில், பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் நடப்பதாக, நீதிபதி ஹேமா கமிட்டி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.
குறிப்பாக பல முன்னணி நடிகர்களின் கட்டுப்பாட்டில் திரையுலகம் இருப்பதாகவும், பெண்களிடம் அத்துமீறல்கள் நடப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி, காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆளும் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திஉள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, ஓராண்டுக்கு முன் தனக்கு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
பிரபல மலையாள இயக்குனரும், கேரள திரைப்பட அகாடமி தலைவருமான ரஞ்சித், பட வாய்ப்பு தொடர்பாக விவாதிக்க கேரளாவுக்கு அழைத்திருந்தார்.
அப்போது, என்னிடம் அவர் அத்துமீறி நடந்ததால், பட வாய்ப்பை நிராகரித்து வெளியேறி விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு புது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள திரைப்பட அகாடமி தலைவர் பதவியில் இருந்து ரஞ்சித்தை நீக்க, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மேலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் நெருக்கடி கொடுத்துள்ளன.
குற்றச்சாட்டு
இது குறித்து கேரள கலாசாரத் துறை அமைச்சர் ஷாஜி செரியன் கூறியுள்ளதாவது:
தவறு செய்திருந்தால், யாரையும் தப்பிக்க விட மாட்டோம். நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பேட்டி ஒன்றில் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் போலீசில் புகார் கொடுக்கட்டும்.
அதன் மீது விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். வெறும் வாய்வழி குற்றச்சாட்டின் அடிப்படையில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?
இவ்வாறு அவர் கூறினார்.