பெங்களூரு -- சென்னை எக்ஸ்பிரஸ் சாலை தயார் இலவசமாக பயணிக்கும் வாகன ஓட்டிகள்
பெங்களூரு -- சென்னை எக்ஸ்பிரஸ் சாலை தயார் இலவசமாக பயணிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 26, 2025 11:16 PM

தங்கவயல்:பெங்களூரு - - சென்னை எக்ஸ்பிரஸ் சாலையில், கர்நாடகாவில் 71 கி.மீ., துாரம் வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த சாலையில் வாகனங்கள் இலவசமாக பயணித்து வருகின்றன.
கர்நாடக தலைநகர் பெங்களூரு, தமிழகத்தின் தலைநகர் சென்னை ஆகியவை, தென்மாநிலத்தின் முக்கிய நகரங்களாக உள்ளது. சென்னையை சேர்ந்தவர்கள் பெங்களூரில் உள்ள ஐ.டி., பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பெரிய பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர்.
வார இறுதி நாட்களில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு செல்கின்றனர். இங்கிருந்து செல்வதற்கு பொது போக்குவரத்துக்கு, முதல் முன்னுரிமை அளிப்பது ரயிலுக்கு தான். ரயிலில் சென்றால் ஆறு மணி நேரத்தில் சென்று விடலாம். ஆனால் பஸ்சில் பயணம் செய்தால் குறைந்தது 8 மணி நேரம் ஆகும். அதிகபட்சம் 10 மணி நேரம் ஆகலாம்.
* இரண்டு சாலை
தற்போது, பெங்களூரில் இருந்து சென்னைக்கு காரில் செல்வதற்கு இரண்டு வழி உள்ளது. ஓசூர், கிருஷ்ணகிரி, வேலுார் வழியாக ஒரு பாதையும்; ஹொஸ்கோட், சித்துார், ராணிப்பேட்டை, ஸ்ரீபெரும்புதுார் வழியாக ஒரு பாதை உள்ளது.
இரண்டு பாதையிலும் கார்களில் சென்றால், ஆறு மணி நேரம் முதல் ஏழு மணி நேரம் ஆகிறது. இதனால் ரயில் பயணத்தை பெரும்பாலோனோர் விரும்புகின்றனர். இரு நகரங்களுக்கு இடையில் வந்தே பாரத், சதாப்தி, டபுள் டெக்கர், எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து ரயில்களிலும் கூட்டமும் நிரம்பி வழிகிறது.
* ராணிபேட்டை
இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு, இரு நகரங்களையும் வேகமாக இணைக்கும் வகையில் பெங்களூரு -- சென்னை இடையில் 258 கி.மீ., துாரத்திற்கு 17,930 கோடி ரூபாய் செலவில் எட்டு வழி சாலை அமைக்க முடிவு செய்தது. கடந்த 2022ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட்டில் இருந்து துவங்கும் சாலை, தமிழகத்தின் ஸ்ரீ பெரும்புதுாரில் நிறைவு பெறுகிறது. கர்நாடகாவில் ஹொஸ்கோட், மாலுார், பங்கார்பேட், தங்கவயல், பேத்தமங்களா; ஆந்திராவின் வெங்கடகிரிகோட்டா, பலமநேர், பங்காருபலேம், சித்துார்; தமிழகத்தில் ராணிபேட்டை, வாலாஜாபேட்டை, அரக்கோணம் வழியாக இந்த சாலை செல்கிறது.
* லாங் டிரைவ்
கர்நாடகாவில், ஹொஸ்கோட்டில் இருந்து பேத்தமங்களா பெமல்நகர் வரை சாலை 71 கி.மீ., துாரத்திற்கு வருகிறது. பின், ஆந்திராவிற்குள் நுழைந்து விடுகிறது. இந்த சாலை கடந்த 2023ம் ஆண்டே முடிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்னும் பணிகள் நிறைவு பெறவில்லை. கர்நாடகாவில் பணிகள் முடிந்து விட்டன.
ஆந்திரா, தமிழகத்தில் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிந்து விடும் என்று, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஹொஸ்கோட்டில் இருந்து பெமல் நகர் வரை 71 கி.மீ., துார சாலை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 16ம் தேதி முதல் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த சாலையில் மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் வாகனங்கள் பயணிக்கலாம். இதனால் வார இறுதி நாட்களில் லாங் டிரைவ் செல்பவர்கள், இந்த சாலையில் தங்கள் கார்களில் பறக்கின்றனர்.
* வாகன சோதனை
சரக்கு வாகன டிரைவர்களும் இந்த சாலையை பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர். இரு, மூன்று சக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த சாலையில் சுங்கச்சாவடிகள் இருந்தாலும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. தற்போதைக்கு வாகன ஓட்டிகள் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
பெமல் நகர் வரை சென்றுவிட்டு, அதே சாலையில் யு டர்ன் எடுத்து வர முடியாது. பெமல்நகரில் இருந்து வி.கோட்டாவுக்கு பழைய சாலையில் செல்ல வேண்டும். பழைய சாலை வழியாக தான் மீண்டும், பெங்களூருக்கு வர வேண்டும். விரைவு சாலை என்பதால், சட்டவிரோத சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. அதாவது கடத்தல் சம்பவங்களும் நடக்கலாம் என்று தகவல் பரவியது. இதனால் வாகனங்களில் போலீசார் சோதனையும் நடத்துகின்றனர்.
==========
பாக்ஸ்
எவ்வளவு துாரம்?
கர்நாடகாவில் ஹொசகோட்டில் 4 கி.மீ., கோலாரில் 0.5 கி.மீ., மாலுாரில் 26 கி.மீ., பங்கார்பேட்டில் 27 கி.மீ., தங்கவயலில் 23 கி.மீ., முல்பாகலில் 0.5 கி.மீ., துாரத்தில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
=========
புல் அவுட்
=====
அதிகாரபூர்வ திறப்பு
பெங்களூரு -- சென்னை எக்ஸ்பிரஸ் காரிடார் சாலை, இரு மாநில மக்களுக்கு வரபிரசாதம். தங்கவயலில் இருந்து பெங்களூருக்கு 45 நிமிடங்களில் சென்றடையலாம். எதிரும், புதிருமாக செல்லவோ, போக்குவரத்து நெரிசல் பிரச்னையோ இருக்காது. தங்கவயலில் இருந்து சென்னைக்கு இனி பயண நேரம் குறையும். சாலையை விரைவில் அதிகாரபூர்வமாக திறக்க வேண்டும்.
- சீனிவாசன், ஸ்டேஷனரி விற்பனையாளர், பெமல் நகர்.
=========
ஆமை வேகம் ஏன்?
ஹொஸ்கோட்டில் இருந்து பெமல்நகர் வரை, பணிகள் விரைந்து முடிந்து உள்ளன. இதற்காக இங்கு உள்ள தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளை பாராட்ட வேண்டும். இதுபோன்று ஆந்திரா, தமிழகத்திலும் பணிகளை விரைவாக முடித்து இருந்தால், இரண்டு ஆண்டுக்கு முன்பே போக்குவரத்து துவங்கி இருக்கும். அங்கு மட்டும் ஆமை வேகத்தில் பணிகள் நடப்பது ஏன்.
- சரவணன், வியாபாரி, உரிகம் பேட்டை.
=======
பஸ் சேவை வேண்டும்
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்ட, தங்க நாற்கர சாலை திட்டம், நாட்டின் முன்னேற்றத்தின் அடையாளம் என்ற பெருமையை பெற்றது. அதுபோல பெங்களூரு -- சென்னை சாலையும் பெயர் எடுக்க வேண்டும். இந்த சாலை சொகுசு கார்களில் செல்பவர்களுக்கு அதிக பயன் அளிக்கும். நடுத்தர மக்களும் இந்த சாலையை பயன்படுத்தும் வகையில், இரு நகரங்கள் இடையில் இடைநில்லா பஸ்களை இயக்க வேண்டும்.
- சம்பத் குமார், ராபர்ட்சன் பேட்டை.
========
குறைந்த சுங்க கட்டணம்
பெங்களூரு -- சென்னை எக்ஸ்பிரஸ் சாலை, இரு நகரங்களின் எல்லை பகுதி வரை மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளது. சாலையை நகருக்குள் வரை நீட்டிக்க வேண்டும். அதிவேகத்தில் வாகனங்கள் செல்லும் போது, விபத்துகள் ஏற்படலாம். இதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். சுங்க கட்டணத்தை நிர்ணயிக்கும் போது, மக்களுக்கு உகந்ததாக நிர்ணயிக்க வேண்டும். அதிக தொகை வசூலிக்க கூடாது. சாலை பராமரிப்பது அவசியம்.
-- சுரேஷ், ரியல் எஸ்டேட் ஊழியர், ஆண்டர்சன் பேட்டை.
***

