எலக்ட்ரிக் கார்கள் பயன்படுத்த பெங்களூரு மாநகராட்சி முடிவு
எலக்ட்ரிக் கார்கள் பயன்படுத்த பெங்களூரு மாநகராட்சி முடிவு
ADDED : செப் 02, 2024 09:09 PM
பெங்களூரு : பெட்ரோல், டீசல் கார்களை தவிர்த்து, எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ஒரு எலக்ட்ரிக் கார் வாங்கியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. மற்றொரு பக்கம் பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதனால் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதில், மக்கள் ஆர்வம் காண்பிக்கின்றனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.
பெங்களூரு, மங்களூரு, மைசூரு என பல்வேறு நகரங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
தற்போது பெங்களூரு மாநகராட்சியும், அதிகாரிகளின் பயன்பாட்டுக்கு பெட்ரோல், டீசல் கார்களை தவிர்த்துவிட்டு எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக டாடா நெக்சன் எலக்ட்ரிக் கார் வாங்கியுள்ளது. வரும் நாட்களில் கூடுதல் எலக்ட்ரிக் கார்கள் வாங்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
முதற்கட்டமாக 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக் கார் வாங்கி உள்ளோம். இந்த கார், ஒரு முறை சார்ஜ் செய்தால், 350 முதல் 400 கி.மீ., மைலேஜ் கொடுக்கும். ரூப் டாப் உட்பட, பல சிறப்பம்சங்கள் உள்ளன. தற்போதைக்கு ஒரு கார் வாங்கி, பரிசோதிக்கும்படி மாநகராட்சி தலைமை கமிஷனர் கூறியுள்ளார்.
எலக்ட்ரிக் கார், பெட்ரோல், டீசல் காரின் விலை ஒன்றுதான். பெட்ரோல், டீசல் கார்களுக்கு எரிபொருளுக்காக செலவிட வேண்டும். எலக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜிங்குக்கு பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும். எலக்ட்ரிக் கார்கள் பயன்படுத்தினால், எரிபொருளுக்கு செய்யும் செலவில், ஓரளவு மிச்சமாகலாம்.
இந்த கார்கள் நல்ல முறையில் செயல்பட்டால், வரும் நாட்களில் படிப்படியாக பெட்ரோல், டீசல் கார்கள் எலக்ட்ரிக் கார்களாக மாற்றப்படும். இவை அதிகாரிகள் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.