சட்டவிரோத பேனர், பிளக்ஸ் குறித்து புகார் அளிக்க 'வாட்ஸாப்' எண் அறிவித்தது பெங்களூரு மாநகராட்சி
சட்டவிரோத பேனர், பிளக்ஸ் குறித்து புகார் அளிக்க 'வாட்ஸாப்' எண் அறிவித்தது பெங்களூரு மாநகராட்சி
ADDED : மே 11, 2024 09:50 PM
பெங்களூரு: சட்டவிரோத பேனர், ஹோர்டிங்ஸ், பிளக்ஸ்களை பார்த்தால், பொதுமக்கள் புகார் அளிக்க,பெங்களூரு மாநகராட்சி 'வாட்ஸாப் எண்'ணை அறிமுகம் செய்துள்ளது.
பெங்களூரில் சட்டவிரோதமாக பேனர், பிளக்ஸ் பொருத்துவதால், நகரின் அழகு பாழானது. கண்ட, கண்ட இடங்களில் அரசியல்வாதிகள் பேனர், பிளக்ஸ் வைப்பதை மாநகராட்சி கண்டுகொள்வதில்லை என, பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இதுதொடர்பாக, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணை நடத்திய நீதிமன்றம், சட்டவிரோதமாக பிளக்ஸ், ஹோர்டிங்களை அகற்றும்படி பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
அதன் பின் பேனர், பிளக்ஸ்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஆனால் ஆங்காங்கே சட்டவிரோதமாக பேனர், பிளக்ஸ்கள் தென்பட்டன. இந்த விஷயத்தை மனுதாரர்கள், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
உத்தரவை பின்பற்றாத மாநகராட்சி அதிகாரிகள் மீது அதிருப்தி அடைந்த நீதிமன்றம், 'பெங்களூரில் சட்டவிரோத விளம்பர பேனர், போஸ்டர்களை கட்டுப்படுத்த, உங்களால் முடியவில்லை.
'இதற்காக ஐந்தாண்டு திட்டத்தை கொண்டு வர வேண்டுமா? பிளக்ஸ்களை அகற்ற, நல்ல நேரத்துக்காக காத்திருக்கிறீர்களா?' என, மாநகராட்சி மற்றும் மாநில அரசிடம் காட்டமாக கேள்வி எழுப்பியது.
அதன் பின் வேறுவழியின்றி மாநகராட்சி, நடவடிக்கையில் இறங்கியது. ஒன்பது மாதங்களில் 59,000 பிளக்ஸ்கள், பேனர்கள் அகற்றப்பட்டன. நகரும் அழகாக மாறியது. லோக்சபா தேர்தல் நடந்ததால், அரசியல் கட்சிகள் ஆங்காங்கே பேனர், பிளக்ஸ்கள் வைக்கப்பட்டு உள்ளன. பனசங்கரி இரண்டாவது ஸ்டேஜில், சட்டவிரோதமாக பேனர் வைத்திருந்த காங்கிரஸ் பிரமுகர் மீது, எப்.ஐ.ஆர்., பதிவாகியுள்ளது.
இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல், காங்கிரஸ் பிரமுகர் கார்த்திங் வெங்கடேஷ மூர்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறும், பனசங்கரி இரண்டாவது ஸ்டேஜில், தேவகவுடா பெட்ரோல் பங்க் சதுக்கம், பட்டலிங்கய்யா சாலையின், பல இடங்களில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பனசங்கரி போலீஸ் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது.
சட்டவிரோத விளம்பர போர்டு, பேனர்களை கண்டால், பொதுமக்கள் புகார் அளிக்கலாம். 94806 85700 வாட்ஸாப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.