நோய்கள் குறித்து ஆய்வு செய்ய பெங்களூரு மாநகராட்சி திட்டம்
நோய்கள் குறித்து ஆய்வு செய்ய பெங்களூரு மாநகராட்சி திட்டம்
ADDED : ஆக 23, 2024 06:09 AM
பெங்களூரு: நகர மக்களிடம் அதிகரித்து வரும் மன அழுத்தம், ரத்த அழுத்தம், நீரிழிவு உட்பட மற்ற நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யும் பணியை, பெங்களூரு மாநகராட்சி துவங்கியுள்ளது.
பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடகாவின் பல்வேறு நகரங்கள், நாட்டின் பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பிழைப்பு தேடி, பெங்களூரு வந்துள்ளனர்.
நகர வாழ்க்கை முறையால், ரத்த அழுத்தம், நீரிழிவு, மன அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர். 74 சதவீதம் இறப்புகள், இத்தகைய நோய்களால் ஏற்படுவது, ஏற்கனவே பல ஆய்வுகளால் உறுதியானது.
நோய்களை முன் கூட்டியே அடையாளம் கண்டால் சிகிச்சை அளிக்கலாம். இதனால் இறப்பு சதவீதம் குறையும்.
இதை மனதில் கொண்டு பெங்களூரு மாநகராட்சி ஆய்வு நடத்த முடிவு செய்தது. நாட்டிலேயே முதன் முறையாக, செயலி அடிப்படையிலான தொற்று நோய்கள் குறித்து ஆய்வு செய்ய, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
வசந்தபுரா மற்றும் கொடிகேஹள்ளி வார்டில், சர்வே பணி நடந்து வருகிறது. விரைவில் 10 வார்டுகளில் சர்வே துவங்கப்படும். அதன்பின் அனைத்து வார்டுகளிலும் சர்வே நடக்கும்.
ஒவ்வொரு வார்டிலும் 4,000 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவர். ஓராண்டு வரை ஆய்வு நடக்கும். 2025ன் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் வேளையில் ஆய்வு நிறைவு பெறும். ஆய்வுக்கு உட்படும் நபர்களின் விபரங்கள், செயலியில் பதிவாகும்.
இந்த செயலி மீது தன் விரலை வைத்தால், அவரது ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஆக்சிஜன் அளவு பதிவாகும்.
நீரிழிவு உள்ளவர்களுக்கு மட்டும் ரத்த மாதிரி பெற்று பரிசோதித்து, புள்ளி விபரங்கள் பதிவு செய்யப்படும். யாருக்காவது அவசர சிகிச்சை தேவைப்பட்டால், அவர் மருத்துவமனைக்கு சென்று இலவசமாக சிகிச்சை பெறலாம்.
மருத்துவமனையில் நோயாளியின் பெயர், வயதை பதிவு செய்தவுடன், அனைத்து விபரங்களுடம் டாக்டர்களுக்கு கிடைக்கும். சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும். ஒருவேளை அந்நபருக்கு மன நோய், மன அழுத்தம், போதைக்கு அடிமையாக இருந்தால், கவுன்சிலிங் அளிக்கப்படும்.
ஆய்வு பணிக்கு மாநகராட்சி சார்பில், ஒரு மருத்துவ ஊழியர், ரோட்டரி அமைப்பின் ஒருவர் நியமிக்கப்படுவர்.
இந்த குழுவினர் ஒவ்வொரு வார்டுக்கும் சென்று ஆய்வு செய்வர். ஆய்வுக்கு 80 முதல் 90 லட்சம் ரூபாய் செலவாகும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்து, பணக்காரர்கள் என, அனைத்து தரப்பினரும் ஆய்வு செய்யப்படுவர்.
பெயர், வயது, பாலினம், செய்யும் பணி விபரங்கள் மட்டுமே பெறப்படும். மற்றபடி தனிப்பட்ட தகவல்கள் பெறப்படாது. ஆதார் கார்டு, பயோமெட்ரிக் போன்ற தகவல் பெறப்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.