பெங்களூரு சாலை பள்ளங்களால் பி.எம்.டி.சி., டிரைவர்கள் அவதி
பெங்களூரு சாலை பள்ளங்களால் பி.எம்.டி.சி., டிரைவர்கள் அவதி
ADDED : செப் 02, 2024 10:35 PM

பெங்களூரு : பெங்களூரு மக்களுக்கு, சமீப ஆண்டுகளாக ரோட்டில் பள்ளங்கள் உள்ளதா அல்லது பள்ளங்களில் ரோடு உள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ரோடுகளின் பள்ளங்களால் பாதசாரிகள், வாகன பயணியர் அவதிப்படுகின்றனர். மாநகராட்சியை வசைபாடுகின்றனர்.
பெங்களூரு நகரம், போக்குவரத்து நெருக்கடிக்கு பெயர் பெற்றது. நகருக்கு சர்வதேச அளவில், அவப்பெயரை ஏற்படுத்துகிறது. நகரின் வாகன போக்குவரத்து நெரிசல் குறித்து, சமூக வலைதளத்தில் கிண்டலாக விமர்சிக்கின்றனர்.
அரை கி.மீ., துாரம் செல்லவும், வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இதற்கிடையே ரோடு பள்ளங்கள், மக்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.
சாகசம்
பள்ளம் விழுந்த ரோடுகளில், வாகன ஓட்டிகள் சாகசம் செய்து, வாகனம் ஓட்ட வேண்டியுள்ளது. குறிப்பாக பி.எம்.டி.சி., பஸ் டிரைவர்கள், இத்தகைய ரோடுகளில் மிகுந்த கவனத்துடன் பஸ்சை ஓட்டி, பயணியரை பாதுகாப்பாக அவரவர் இடத்தில் சேர்க்க வேண்டும்.
ஒரு புறம் போக்குவரத்து நெரிசல், மற்றொரு பக்கம் பள்ளம் விழுந்த ரோடுகள், பி.எம்.டி.சி., டிரைவர்களின் துாக்கத்தை கெடுத்துள்ளது.
இது போதாது என்பது போல, பஸ்கள் அவ்வப்போது பழுதடைந்து, நடுரோட்டிலேயே நிற்கின்றன.
நிர்ணயித்த நேரத்தில் பஸ் சென்று சேராவிட்டால், பயணியர் கோபம் அடைகின்றனர்; திட்டுகின்றனர்.
இந்த காரணத்தால், டிரைவர்கள், பயணியர் இடையே வாக்குவாதம் நடந்த உதாரணங்களும் ஏராளம்.
ஒரு மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்துக்கு, இரண்டு மணி நேரமாகிறது.
பி.எம்.டி.சி., பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல வேண்டும். தினமும் இத்தனை டிரிப்புகள் செல்ல வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பள்ளம் விழுந்த ரோடுகளில், பஸ்சை இயக்கி நிர்ணயித்த இடத்தை அடைவது, அவர்களுக்கு சவாலாக உள்ளது.
நோட்டீஸ்
சில நேரங்களில் டிரிப் எண்ணிக்கை குறைந்தால், உயர் அதிகாரிகள் காரணம் கேட்டு, டிரைவர்களுக்கும், நடத்துனர்களுக்கும் நோட்டீஸ் அனுப்புகின்றனர். இதனால், டிரைவர்கள், நடத்துனர்கள் விரக்தியில் உள்ளனர்.
'பள்ளங்கள் இல்லாத ரோடுகளே, பெங்களூரில் இல்லை. இத்தகைய ரோடுகளில் செல்வதால், பஸ்கள் அவ்வப்போது பழுதடைகின்றன. டயர் பஞ்சராவது, பிரேக் பழுதடைவது, கிளட்ச் பிரச்னையால், பஸ்கள் திடீரென ரோடுகளில் நிற்கின்றன. குறைந்தபட்சம் தினமும் ஐந்தாறு பஸ்கள் பழுதடைகின்றன.
'மழை பெய்யும் போது, பஸ்கள் ஓட்டுவது பெரிய சாகசம். ஆறுகள் போன்று தண்ணீர் பாயும். எங்கு தண்ணீர் பாய்கிறது, எங்கு எவ்வளவு ஆழத்தில் பள்ளம் உள்ளது என்பதை கவனித்து, மிகுந்த எச்சரிக்கையுடன் பஸ்களை ஓட்ட வேண்டியது உள்ளது.
'பள்ளங்களை மூடுவதுடன், பஸ்களையும் புதுப்பிக்க வேண்டும்' என, பி.எம்.டி.சி., பஸ் டிரைவர்கள் மன்றாடுகின்றனர்.