ADDED : ஜூலை 13, 2024 05:19 AM

பெங்களூரு : ''மூடா தொடர்பான ஆவணங்களை, நான் கொண்டு வந்ததை நிரூபித்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்,'' என, நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ் சவால் விடுத்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
'மூடா' தொடர்பான ஆவணங்களை, சிறப்பு விமானம், ஹெலிகாப்டரில் நான் கொண்டு வந்ததாக, பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டுகின்றனர். நான் ஆவணங்களை கொண்டு வந்ததை நிரூபித்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
மூடாவின் ஆவணங்களை, யாராவது கொண்டு வர முடியுமா? 20 ஆண்டுகளாக தவறுகள் நடந்துள்ளன. 2005 வரையிலான அனைத்து விஷயங்கள் குறித்தும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். தேவையின்றி, சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியுமா?
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் விசாரணையை ஒப்படைக்காமல், பா.ஜ.,வினரிடம் ஒப்படைக்க வேண்டுமா? இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். முறைகேட்டை மூடி மறைக்கவில்லை. அரசு தவறு செய்த யாரையும் விடாது. சிறிது நாட்கள் பொறுத்திருங்கள். அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.