ADDED : மே 29, 2024 05:42 AM

பெங்களூரு, : பெண் கடத்தல் வழக்கில் முன்ஜாமின் கேட்டு பவானி ரேவண்ணா தாக்கல் செய்த மனு இன்று மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்ய, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணை கடத்திய வழக்கில், பவானி ரேவண்ணாவின் உறவினர் சதீஷ் பாபுவை, எஸ்.ஐ.டி., குழுவினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி, பவானிக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால், எந்த பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்ற தகவல் இல்லை.
முன்ஜாமின் தாக்கல்
இதனால் அச்சமடைந்த பவானி, இவ்வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்கக் கோரி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு, நேற்று நீதிபதி சந்தோஷ் கஜண்ணா பட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.ஐ.டி., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''விசாரணைக்கு ஆஜராகும்படி எந்த சம்மனும், மனுதாரருக்கு அனுப்பப்படவில்லை.
எனவே, முன்ஜாமின் மனு மீது ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம் வேண்டும். விசாரணையை வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை ஒத்திவைக்க வேண்டும்,'' என வாதிட்டார்.
கைதுக்கு வாய்ப்பு
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'எஸ்.ஐ.டி., மீது குற்றம் சாட்டுவோர் கைது செய்யப்படுகின்றனர். இவ்வழக்கில் முன் அறிவிப்பு இல்லாமல் பாவனியை கைது செய்யும் வாய்ப்பு உள்ளது. எனவே, அவருக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும். அடுத்த விசாரணை நடக்கும் வரை, அவரை கைது செய்யாமல் பாதுகாக்க வேண்டும்' என்றார்.
இதற்கு நீதிபதி, ''பவானியை இதுவரை குற்றவாளியாக்கவில்லை. இதனால் எப்.ஐ.ஆரில் சேர்க்காமல், கைது செய்யக்கூடாது என்பதல்ல. இருந்தாலும் முன்ஜாமின் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க சில ஆவணங்கள் தேவை.
இது தொடர்பாக எஸ்.ஐ.டி.,யினர் ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய வேண்டும். எனவே, வழக்கு விசாரணை, நாளை (இன்று) ஒத்திவைக்கப்படுகிறது,'' என்றார்.